பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

நாகரீகம், நாகரீகம் என்பதன் பொருள் என்ன! நாகரீகமென்பதன் பொருள் விலங்கினங்களைவிட மனிதன் குறைவாக வேலை செய்து அதிக பயன் அடைவது தான்.

B & C மில்லில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி விடியற் காலையிலே அயர்ந்து உறங்கும் ஆசை மனைவியிடம் “போய் வருகிறேன்" என்று சொல்லாமலே வெளியில் கிளம்பிவிடுகிறான். பால்மண மாறாப் பச்சிளங் குழந்தையின் பால்வடியும் வதனத்தைப் பார்த்துக்கொண்டே வெளியேறுகிறான். காலை 6 மணிக்கு மனிதனாக ஆலைக்குள் சென்று நீண்ட நேரத்திற்குப்பின் மாஜி மனிதனாகத் திரும்பி வந்தால் அவன் மனிதனாவது எப்படி? கோழியோடு அதிகாலையில் விழித்தெழுந்து கோட்டனோடு தூங்குகிறான் நம் தொழிலாளி! ஓயாமல் உழைத்து உழைத்து அருமையான பொருள்களை உற்பத்தி செய்கிறான் தொழிலாளி. ஆனால் அவன் வாழும் வாழ்க்கை எப்படி? சுருங்கச் சொன்னால் அவன் வாழ்வது மிருக வாழ்க்கைதான். நாகரீக நாட்டிலே, தன்னாசு தழைத்தோங்குவதாகச் சொல்லும் இந்த நாட்டிலே தொழிலாளி மிருக வாழ்க்கை வாழவேண்டி யிருக்கிறது. மிருகங்களுக்குக் கிடைக்கும் ஓய்வுகூட ஏழைத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை! உற்பத்தியைப் பெருக்கும் தொழிலாளி உயரமுடிகிறதா? பாருங்கள்!

சேலத்தில் 200-ம் நெம்பர் வேட்டியை நெய்கிற தொழிலாளி உடுத்துவதோ 30-ம் நெம்பர் மோட்டா வேட்டி, தொழிலாளி கட்டுகிறான் நான்கு அடுக்கு மாடிகள். அவன் வாழ்வதோ காற்றமெடுக்கும் ஓட்டைக் குடிசையில், அந்த ஓட்டைக் குடிசையிலோ ஒன்பதுபேர். மூவாயிரம் வகை நெல் நம் நாட்டிலே பயிராகிறது, ஆனால பயிரிடும் விவசாயிக்கு உண்ணக் கிடைப்பது வரகோ, சோளமோதான். உற்பத்தி பெருகினால் மட்டும் தொழிலாளிக்குப் போதுமா? தொழிலாளிக்கு முக்கியமாக வேண்டியதென்ன? தேவைக்கேற்ற வசதி, சக்திக்