பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

கேற்ற உழைப்பு! சர்க்கார் இதை முறைப்படி வகுக்கவேண்டும். அதிகமாக வேலை செய்யும் மாட்டின் மீது நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். தொழிலாளிக்கோ என்றும் ஒரே நிலை! தொழிலாளி மேனி கறுக்க உழைக்கிறான். அவன் உற்பத்தியைப் பெருக்காவிட்டால் நமக்கு உணவேது? உடையேது? வெளியிலிருந்தெல்லாம் சென்னை வந்து குடியேறிய மக்களுக்கு வீடேது தொழிலாளியின் உழைப்பாலன்றோ பிர்லாவின் பணப்பை நிரம்பியது. மிட்டாதாரும், மிராசுதாரும் எப்படி உயர்ந்தார்கள். அவர்கள் நாட்டில் சில நாளும் நகரத்தில் சில நாளும் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? தொழிலாளியின் இடைவிடா உழைப்பாலன்றோ இவர்கள் வாழ்கிறார்கள். உழைத்து உழைத்து உருக்குலைந்த பாட்டாளி உரிமைகள் கேட்டால் சிறையிலே சுட்டுத் தள்ளப்படுகிறான். நாகரீக சர்க்காரா இதைச் செய்வது?


சென்னைமா கரிலே அரிசியில்லையே என்று நாம் முத்திய சர்க்காரைக் கேட்டோம். உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியை பெருக்கிக் கொண்டிருந்த சமயத்திலே கேட்டோம்.

உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் உபரியை அனுப்பு என்று மத்திய சர்க்கார் கூறிற்று. அந்த உபரி அரிசியை சென்னைக்கு அனுப்பிய உத்திரப் பிரதேச சர்க்கார் உரிய விலையைவிட அதிக விலை ரூ. 108 லட்சம் வாங்கிக் கொண்டார்கள் சென்னை சர்க்காரிடமிருந்து! இது சர்க்காருக்கு சர்க்கார் நடத்தும் கள்ள மார்க்கெட் வியாபாரம்.

இச்சமயம் "ஒரு முதலாளி வெண்ணெய் விற்றால் ரூபாய் பத்து கிடைக்கிறது. சுண்ணாம்பு விற்றால் ரூ 15-0-0 லாபம் கிடைக்குமென்று யாரவது சொன்னால் உடனே வெண்ணெய் வியாபாரத்தை விட்டு விட்டு சுண்ணாம்பு வியாபாரத்தில் இறங்கிவிடுவான். முதலாளிகளின் நோக்கமெல்லாம் லாபம்தான்?" என்று உலகம் போற்றும் அறிஞர் பெர்னாட்ஷா முதலாளிகளைப் பற்றி நகைச்சுவையுடன் கூறியுள்ளது என நினைவுக்கு வருகிறது.