பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

சட்ட மந்திரியாகக் கொடுத்திருக்கிறது நாடு, நிதி மந்திரி -- டாக்டர் -- ஜான் மத்தாய் அவர்களைத் தென்னாடு தந்திருக்கிறது. இன்னும் தொழிலை அழகுற நடத்த நம்மிடம் தோழர். ஜி. டி. நாயுடு இருக்கிறார். விவசாயத்துக்கு வேண்டுமா ஒரு ஆள்! மயிலையிலே பழத்தைப் பழுக்கவைக்கும் தோழர் -- சௌந்திர பாண்டியன் நம்முடன் இருக்கிறார். தோழர் -- சௌந்திரபாண்டியன் விவசாயத்திலே கண்டுபிடித்துள்ள நூதன முறைகள் நேரு சர்க்காருக்கு எங்கே தெரியப்போகிறது?

பிற்போக்குப் பத்திரிகைகளிலே ஒரு படம் வெளி வந்ததை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். ராஜாஜி அவர்கள் ஏர் உழும் பாவனையில் அமைந்துள்ளது படம். கனம் ராஜாஜி, கவர்னர் ஜெனரல். ராஜாஜிகூட ஏர் உழுகிறாரே! இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இதை விளங்கிக்காட்டி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். மேலும் பரம்பரை பரம்பரையாக ஏர் உழாத மரபிலே வந்த ஆச்சாரியார் ஏர் உழுகிறாரே என்று வியந்தேன்! அவர் ஏர் உழுவதாக எடுக்கப்பட்ட புகைப்படம் சந்தேகத்தைக் கிளப்பியது. அவர் உழுவதாக எடுத்துப்போடப்பட்டிருந்த புகைப்படத்தின் மீது உங்கள் கண்ணோட்டத்தை விட்டால் அவருடைய காலில் செருப்பு அணிந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம்! செருப்புப் போட்டுக்கொண்டு யாரும் ஏர் உழவே மாட்டார்கள். இன்று கூட வயல்களிலே செருப்புப் போட்டுக்கொண்டு போகக்கூடாது என்று குடியானவர்கள் சொல்வதைப் பார்க்கலாம். சர்க்காருக்கு ஒரு நல்ல புகைப்படம் எடுப்பவர்கள் கிடைக்கவில்லையா? சர்க்கார் இனியாவது இதுபோன்ற காட்சிகளைப் படமெடுக்கும்பொழுது கைதேர்ந்த போட்டோ வல்லுனர்களைக் கொண்டு படமெடுக்கவேண்டும்,