பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

சிறந்த கவிஞர் தேவை, இதோ ஹரீந்திரநாத் இருக்கிறார்.

நாம் மட்டுமா மேவிழாக் கொண்டாடுகிறோம்! இல்லை நமக்கு வழிகாட்டி, ஆனால் இப்பொழுது நம்மை விட்டுப் பிரிந்தவர், எனக்குக் குரு, திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் இன்று புதுச்சேரியிலே பேசுகிறார்; நண்பர் நெடுஞ்செழியன் கோவையிலே பேசுகிறார்; அன்பர் அன்பழகன் திருச்சியிலே பேசுகிறார்; இன்று நம்முடைய தோழர்களில் பலர் பல இடங்களிலே தொழிலாளர் முரசைக் கொட்டுகிறார்கள், நமக்கு இது மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆனால் சர்க்காருக்கோ இது மருட்சிக்குரிய செய்தியாகும். இதுபோன்ற கூட்டங்களுக்கு சர்க்கார் இனி தடை விதித்தாலும் விதிக்கலாம்.

”உம்மால் ஆனதைச் செய்யுங்கள்” என்ற வாசகம் ஒன்றைக் கவிஞர் அழகுற எடுத்துரைத்தார். நம்மை ஆளும் சர்க்கார் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

”சூளையில் நடைபெற்ற கூட்டத்திலே, ;எம்மை ஆளும் சர்க்காரே! உம்மால் ஆனதைச் செய்யும்’ என்று சொன்னீர்களே! சொல்லலாமா! வாருங்கள் சேலம் சிறைக்கு” என்று சர்க்கார் நம்மையெல்லாம் அழைத்தாஅலும் அழைக்கலாம்.

ஒரு சர்க்கார் மிக்க பலம் பொருந்தியதாயிருப்பலும், வாய்ப்புகளும் வசதிகளும் பல பெற்றதோடு பிரசார பலம் பெற்றதாயிருப்பதாலும், அந்த அளவு மக்களிடம் அச்சத்தைத் தங்களால் உண்டாக்க முடியும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். பெரும்படை, பட்டாளம், போலீஸ், ஜயில் இவை இருப்பதால் உரிமைப் போராட்டம் நடக்க வழியில்லையென்று எந்த சர்க்காரும் எண்ண வேண்டாம்.