பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பணக்காரன் ஒரே பிரச்சினைதான் முக்கியமாக இருக்கிறது.

பொதுவுடைமைக் கட்சி பலாத்காரத்தில் இறங்குகிற பொழுது - நாம் அதைக் கண்டிக்கச் செய்கிறோம். "பொதுவுடைமைத் தோழர்கள் - பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சர்க்கார் குற்றம் சாட்டியபோது கம்யூனிஸ்ட்கள் அதை மறுத்து ஒருவித அறிக்கையையும் வெளியிடவில்லை. பலாத்காரத்திலே நமக்கு நம்பிக்கையில்லையென்று பலமுறை சொல்லியிருக்கிறோம். நாம் பலாத்காரத்தை விட்டுப் பிரிந்திருக்கிறோம். தமிழில் நான் பேசுவது கவிஞருக்குச் சற்று புரியாமல் இருக்கலாம். நான் அவருக்கு அதனைத் தனியே சமயம் வாய்க்கும்போது விளக்கிக் கூறுவேன் சமுதாயத் துறையிலே ஒரு புரட்சியை உண்டாக்கிய பின்னர்தான் மக்கள் லெனினை வரவேற்றார்கள். ஒரு வால்டேர் தோன்றிய பின்னர் தான் ஒரு லெனின் தோன்ற முடிந்தது. லெனின் தோன்றுவதற்கு முன் ஒரு வால்டேர், ஒரு ரூஸ்ஸோ தோன்றியாக வேண்டும்.

போப்பின் கொடுமையைக் களைந்துன்றிய - உலகம் தட்டையாக இல்லை, உருண்டையாக உள்ளது என்று சொல்ல -- அண்டத்தில் உள்ளவற்றைத் தூரதிருஷ்டிக் கண்ணாடியால் கண்டு தெரிவிக்க, அலைகடலின் ஆழத்தை அறிந்துகூற, பல அறிஞர் தோன்றிப் பாதையை அழகுறச் செப்பனிட்ட பின்னர்தான் புரட்சித்தேவன் லெனின் தோன்றி வெற்றியுடன் உலாவ முடிந்தது.

நம் நாட்டிலே உண்மைச் சரித்திரம் நிலவவேண்டுமானால் ஜாதீபேதம் ஒழிய வேண்டும், ஜாதிச் கோட்டையை இடித்துத் தகர்த்தால்தான் அடிப்படை இறுகிக் கெட்டியாக இருக்கும். மூடப் பழக்க வழக்கங்களை குறியடித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் அஸ்திவாரம் பலமாக இருக்கும். அந்த வேலையைத் தான் இன்று திராவிட முன்னேற்றக்கழகம் செய்துவருகிறது.