பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அதற்கு -- ரஷ்யாவிலே -- அடிப்படை பலமாக இருந்ததால்தான் ஜார் அரசன் கவிழ முடிந்தது. ஜார் அரசன் கவிழ்ந்த பின்னர்தான் மாஸ்கோ மணம் மாநிலமெங்கும் கமழும் நிலை ஏற்பட்டது.

எதிர்ப்புப் புரட்சியை ஆங்கிலத்தில் கவுன்டர் ரிவல்யூஷன் (Counter Revolution) என்று சொல்வார்கள். நம் நாட்டிலே நடப்பது எதிர்ப்புப் புரட்சி.

1950-ஆம் ஆண்டிலே, அமெரிக்காவும் இந்தியாவும் கைகுலுக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவில் நடைபெறாத நிகழ்ச்சி ஒன்று நம் நாட்டில் நடைபெறுகிறது. வடநாட்டிலே கும்பமேளா! கும்பமேளாவிலே மக்கள் பெருவாரியாகக் கூடியிருந்தார்களாம். கூடியிருந்த மக்கள் பலர் நிர்வாணக்கோலத்திலே செல்லும் கோலாகலாக் காட்சியைக் கண்டு களித்தார்களாம். பலர் நிர்வாணக் கோலத்துடன் கங்கையிலே மூழ்கினால் மோட்சலோகத்துக்கு வழியிருப்பதாக எண்ணுகிறார்களாம். இப்படி 1950-ஆம் ஆண்டிலே ஒரு செய்தியைப் பிற்போக்குப் பத்திரிகைகளிலே காண்கிறோம். அதுபற்றிய விளக்கங்களையும் படங்களையும் அந்தப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இத்தகைய நாட்டிலே எப்படி மா சேதுங் தோன்றுவான்? நம் நாட்டிலே ஒரு மா சேதுங், ஒரு லெனின் தோன்றாமல் புரட்சி எப்படி மலரும்?

இன்று தொழிலாளர்கள் இன்பமாய் வாழவேண்டுமானால் முதலில் அடிப்படையில் மாற்றம் செய்தாக வேண்டும்.

இன்று தொழிலாளர்களில் பலர் மாயாய் பிரபஞ்ச வாழ்வைப்பற்றியும், ஆண்டவன் திருவடியில் இரண்டறக் கலப்பது எப்படி என்பதைப் பற்றியும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்களே, அதை முதலில் போக்கடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முதலில் வாழ்க்கையிலே உள்ள சலிப்பைப் போக்கவேண்டும். இந்த உலகம் பெரியது,