பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

சமுத்திரக் கதைகள்


நாய்க்கும் உண்டு, ஈக்கும் உண்டு, என்பதை சொல்றதுக்குதான் இதைச் சொன்னேன்.”

சித்தப்பா பேச்சின் தாத்பரியம் புரியாமல், முத்துக்குமார், பிடரியில் கைகளை கோர்த்தபோது, சித்தப்பா அவற்றை விலக்கி அவன் கோணல்மாணல்களை நேராக்கி மேற்கொண்டு வழி நடத்தினார்.

சிறிது தூரம் நடந்திருப்பார்கள். திடீரென்று முத்துக்குமார் ஒருகாலை துக்கி பெருவிரலை பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாய் ஆடி, எந்த சைக்கிள் அவன் மீது மோதியதோ, அந்த சைக்கிளின் இருக்கையை ஆதாரமாக பிடித்துக் கொண்டு குனிந்து நின்றான். வலியில் பல்லைக் கடித்தான். சித்தப்பா அவனை தன்மீது சாய்த்துக் கொண்டு, கோணல் மாணலாக நின்ற சைக்கிள் பையனை உற்றுப் பார்த்தார். அவன் சைக்கிள் இருக்கை வரை தலையை குனிந்து கொண்டு லேசாய் நிமிர்வதும், மீண்டும் குனிவதுமாக இயங்கினான். அந்த சைக்கிளின் பின்பக்கம் பிளாஸ்டிக் பெட்டி. அதன் பச்சை பரப்பை மறைத்தபடி தலையற்ற கொக்குகள் போல் ஆவின் பால் உறைகள்... அந்த பெட்டி முழுக்கும் தேன் கலக்காத பாலோட்டம். முத்துக்குமார் அந்த பையனை எதிரியாக பார்த்து, அடக்கி வைத்த உணர்வுகளுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்தான்.

ஒனக்கு மூள இருக்காடா? லெப்டல போக வேண்டியவன் ரைட்டுல வந்தா என்னடா அர்த்தம்..? வலிய வந்து மோதுறியே. உனக்கு அறிவிருக்கா?

‘மன்னிச்சிடுங்க அண்ணே. பால் லாரி வர லேட்டாயிட்டுது. முப்பது வீடுகளுக்கு பால் குடுக்கணும். அதனால அவசரத்துல...’

‘உன் அவரசத்துக்கு நாங்கதானா கிடைச்சோம்?

அப்புறமா திட்டுங்கண்ணே. நீங்க வீட்டுக்கு வரும்போது, அம்மா காபியோட வாசலுக்கு வரவேண்டாமா? உங்க வீட்டுக்கும் நான்தாண்ணே பால் கொடுக்கேன்... போகட்டுமா...'