பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெண் குடி

ஆரல்வாய் மொழியின் சுற்றுப்புறச் சூழலும், அதன் மடியில் கிடந்த அரண்மனை மாதிரியான அந்த வீடும், பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அப்போதைய நாஞ்சில் நாட்டின் வட எல்லையான இந்த ஊரை வளைத்துப் பிடித்திருப்பதுபோல், அதற்கு வடக்குப் பக்கமாய் திரும்பி நிற்பதால் வடக்கு மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை. ஊரையே வழிமறித்து நிற்கும் இந்த மலைக்கு எதிரே மல்லுக்கு நிற்பது போன்ற பெருங்குன்றான குருசடி மலை. இந்த இரண்டிற்கும் இடையே நூறடி இடைவெளி... கீழே அதல பாதள கணவாய். இதற்கு பாயிட்டு மெத்தையிட்டது போன்ற மணல்தேரி. தென்மேற்கில் பெயருக்கேற்ற தாடகை மலை... தென் கிழக்கில் ஈட்டியும், வாளுமான கொலை வீரர்களைக் கொண்ட சமஸ்தான கோட்டைக் கொத்தளம்...

இந்தப் புறச்சூழலின் அடிவாரத்தில் ஒரு அகச்சூழலாய் கொல்லைப்புறக் குளமும், தோப்பும் துறவுமாய் விளங்கிய அந்த “தறவாடு’, நான்கு பக்கமும் நாலு நாலு அடுக்குகளைக் கொண்டது. மேலே மகுடம் சூட்டியது போல் ஒரு மாடியையும் கொண்டது. வீட்டின் முகப்பிற்கு அடுத்த வெளிச் சுவர் ஈட்டி, வேல், துப்பாக்கி போன்ற வேட்டைக் கருவிகளை அப்பி வைத்திருந்தது.

ஆனாலும்

அந்த பீதிக்கு ஒரு விதி விலக்காய், அந்த வீட்டுப் பெண்கள் தோன்றினார்கள். ஏமான் வீட்டுப் பெண்கள், என்பதால் ஊராருக்கு பயம். அதே சமயம் அழகாய் இருந்ததால், ஒருவித ரசனைச் சுவை. ஏமானின் காவலாளி எவனாவது ஒருவன் மனதைத் தோண்டி அந்த ர்சனையை கண்டுபிடித்து விடுவான் என்ற அச்சத்தில் ஏற்படும் ஒரு பயபக்தி.