பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சமுத்திரக் கதைகள்


முன்னால போகணும் என்கிறேன். இவள் இல்லாமல், என்னால வாழ முடியுமுன்னு நினைத்துக்கூட பார்க்க முடியல. எங்க ரெண்டு பேர்ல யாரு சாமி முன்னால போவாங்க?”

“இதோ பாருங்கோ... நான் கல்யாணப் பொருத்தம்தான் பார்க்க வந்தேன். அபசகுனமா பேசாதேள், எல்லாம் பிள்ளையார் பார்த்துக்குவார். சரி... விஷயத்திற்கு வருவோம். இதோ இந்த ஜாதகம் இருக்கே... இது சுத்த ஜாதகம். இந்தப் பெண்ணால, ஒங்க பையன் எங்கேயோ போகப்போறான். அன்னப்பறவை மாதிரி வாழப்போறாள். இதையே முடிச்சிடுங்கோ. இப்படிப்பட்ட ஒரு நல்ல சுத்த ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இதுல ஒரு வேடிக்கை என்னன்னா... ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே, அவரோட பையனுக்கு இருக்கு. அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே, இந்தப் பொண்ணுக்கு இருக்கு. இப்படி நாலுமே சுத்த ஜாதகமாய் அமையுறது ரொம்ப அபூர்வம். உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும், பிரமாதமாய் வாழ்வாள். ஓங்களோட மறுபதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சுடுங்கோ.”

ஆண்டவனும், அகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர், அந்த ஜாதகத்தை, அகிலாம்மா வாங்கி, தனியாக வைத்துக்கொண்டாள். உள்ளறைக்குப்போய், ஒரு தாம்பளத் தட்டில், வெற்றிலைப் பாக்கையும், ஒரு சிப்பு வாழைப்பழத்தையும், ஒரு நூறு ரூபாய் நோட்டையும் வைத்து, தனக்கு சாமியான சாஸ்திரியிடம், பணிவன்போடு நீட்டினாள். அவரும் எழுந்துநின்று, வாழைப்பழத்தை வேட்டி முந்தியிலும், ரூபாய் நோட்டை” பைக்குள்ளும் போட்டபடியே, வெற்றிலை கொண்ட தாம்பளத் தட்டை திருப்பிக் கொடுத்தார். பாக்கை எடுத்து, வாயில் போட்டுக் கொண்டார். அது கடிபடும் முன்பே, ஒங்களுக்குன்னு அர்ச்சித்த விபூதி குங்குமத்தை கொடுக்க மறந்துட்டேன் பாருங்கோ... இந்தாங்கோ.' என்றார்.

ஒரு கை மேல் இன்னொரு கையை வைத்தபடி, இருவரும், சாஸ்திரி நீட்டிய விபூதி குங்குமத்தை வாங்கிக் கொண்டார்கள்.