பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

45


கொண்டிருக்கிறார். இன்னும் நாலு நாளையில் விசா கிடைச்சுடும். அநேகமாய் அடுத்த வாரம் புறப்படணுமாம்.”

அருணாசலம், மகளை அலுங்காமல், குலுங்காமல் அசைவற்றுப் பார்த்தார். அவளை மேல்நோக்காய் பார்த்தபடியே அதிசயித்து நின்றார். ஆனால், அம்மாக்காரிக்கு, உடனடியாய் ஒன்று தட்டுப்பட்டது. மனதிற்குள் பம்பரமாய், வட்ட வட்டமாய் சுற்றிய அந்தச் சுற்று, அவள் நாக்கையும் சுழல வைத்தது. ஒரு அபாய எச்சரிக்கையை கணவருக்கு எடுத்துரைத்தது.

“ஏங்க... அவளுக்குத்தான் அறிவில்லன்னா... உங்களுக்குமா இல்ல? இப்பவே இவளுக்கு இருபத்தொன்பது முடியப்போகுது. திரும்பி வரும்போது முப்பத்திரண்டு முடிஞ்சுடும். எவன் கட்டிக்க வருவான்? இப்பவே வயசாயிட்டுதுன்னு பல பயல்களும், அவன் அப்பன்மாரும், அம்மாமாரும் இங்க வந்து நொறுக்குத்தினி தின்னுட்டு, அப்புறம் கிணத்துல விழுந்த கல்லா கிடக்காங்க... இவள் சொன்னது நல்ல செய்தியாக்கும்...”

அம்மாவை நெருங்கி, கோபமாக பேசப்போன மகளுக்கும், வாய் துடிக்க நின்ற மனைவிக்கும் இடையே, வலது கையை எல்லைக்கோடாய் நீட்டியபடியே, அருணாசலம், கண்களை மூடினார். மகளின் மகிழ்ச்சியை அதிகப்படியாய் பகிர்ந்து கொண்ட அவருக்கு, இப்போது அது ஒரு துக்கப் பகிர்வாகத் தோன்றியது. மனைவி சொல்வதில், நியாயம் இருப்பதுபோலவும் தோன்றியது.

அருணாசலமும், ஒரு முடிவுக்கு வந்தார். அதைக் காட்டும் வகையில், மகளின் இரண்டு கரங்களையும் தனது இரண்டு கரங்களில் ஏந்தியபடியே, அவளை சோபா செட்டில் உட்கார வைத்தார். எதிர்முனை ஒற்றைச் சோபாவில் அமர்ந்து, அதன் சக்கர நாற்காலிகளை நகர்த்தியபடியே, மகளுக்கு நெருக்கமாக வந்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்துவாரோ, அப்படி, ஏற்ற இறக்கமாய், அவ்வப்போது தன் பேச்சு எடுபடுகிறதா என்று மாணவர்களைப் பார்த்ததுபோலவே, மகளையும் பார்த்தபடியே, முன்னுரையும், பொருளுரையும், முடிவுரையுமாய் பேசத் துவங்கினார்.