பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

55


நம் மூதாதையர்களுக்கும் உண்டு. தயவு செய்து இந்தச் செடியானவள், ஆலாய்ப் படருவதற்கு, ஆசிர்வதியுங்கள்.”

கிதா, வேகவேகமாய் பேசிவிட்டு, மெள்ள மெள்ள மூச்சு விட்டாள். தாயையும், தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள். அன்னையானவள், அசையாச் சிலையாய் நின்றாள். மகள் தரப்பு நியாயத்தை புரிந்துகொண்ட பக்குவம், அவள் முகத்தில், லேசாய் படர்ந்தது. அதேசமயம் -

அருணாசலம், மார் தட்டாக்குறையாய் எழுந்து, மகளின் கரங்களை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டார்.

அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல், முகம் இறுகியும் இளகியும், போனது . சுயமிழந்த, அதேசமயம், அதைவிட சிறந்தத்தோர் கூட்டுப்பொருளான இயல்பு அந்த முகத்தில் மின்னியது. மகளை நெருங்கினார். அவள் இரண்டு தோள்களிலும், தனது கரங்களை, தொங்கப் போடாமல், மடித்துப் போட்டபடியே அறிவுறுத்தினார்.

“ஒனக்குன்னு, இன்னொருத்தன், இனிமேல் பிறக்கப் போறதில்லை. அப்படி பிறந்தவன், இறந்துட்டாலும், 'நான் கவலைப்படப் போறதும் இல்லை. உன்னோட ஆராய்ச்சியை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொடரும்மா. உன்னைப் பிடித்து, உன் அறிவையும் பிடித்து எவன் வந்தாலும், அவன், உனக்குப் பிடித்தால், எங்களுக்குப் பிடித்தது மாதிரிதான். இந்த நிகழ்வு உன் ஆய்வுக் காலத்துலயே நடக்கணுமுன்னு வாழ்த்துகிறேன். உனக்கு இது சம்பந்தமான கவலை, வரக்கூடாதுன்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.”

கிதா, மென்மையாக உறுதி அளித்தாள்.

“வேலை வெட்டி இல்லாதவளுக்குத்தான் இந்த மாதிரி கவலைகள் பூதாகரமாய் வரும். எனக்கு, ஒருவேளை அந்தக் கவலை சின்னதாய் வந்தாலும், என் ஆராய்ச்சியே, அதை விழுங்கிடும். உங்களோட ஆசையை நிறைவேற்ற முடியலன்னுதான்..."