பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...

என்றும், அவரது நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இதற்காக நான் இரண்டு நாள் வீட்டுக்காவலில் இருந்தேன். அந்த அமைச்சரின் மகன் திருமணம் இனிதே நடைபெற்றதை பத்திரிகைகளில் தெரிந்துகொண்டேன். சிலசமயம் வேண்டியவர்களுக்கு நேரில் அழைப்பிதழ்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில், இப்படி ஏற்படுவதுண்டு. இதற்காக அமைச்சர் மீது எனக்கு வருத்தமும் இல்லை. என்றாலும், இந்தப் பின்னணியில் நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. இதன்ால் அந்தச்சிறுவனை அந்த நிறுவனமும் தன்னிடம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. என்றாலும்

வழக்கமான தொண்டு நிறுவனங்களிலிருந்து சிறிது விதிவிலக்காக உள்ள ஒரு நிறுவனத்தில் இப்போது இந்தச் சிறுவன் இருக்கிறான். இவனது ஏழைப்பெற்றோர் சில நூறு ரூபாய் நோட்டுக்களை செலவழித்து மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, முறை வைத்து இவனைப் பார்த்து வருகிறார்கள். இந்தச் செலவைவிட இன்னொரு சிக்கல். பதினைந்து வயதை தாண்டிய சிறுவர்களை இந்த நிறுவனத்தில் வைத்துக்கொள்ள இயலாதாம். இப்போது இவனுக்கு பதினான்கு ஓராண்டு காலத்தில் இவன் சென்னையில் பெற்றோரிடம் அனுப்பப்படுவான். இப்போது விடுமுறையில் வரும்போதெல்லாம் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். அவனது பெற்றோர்கள் தங்களது அன்றாட ஜீவனத்தொழிலை ஒதுக்கிவிட்டு, இவனை நாடு நகரெங்கும் தேடிப்பிடித்து கொண்டுவரவே பொழுது போய்விடும்.

பதிலுக்காக ஒரு கேள்வி

இந்தச் சிறுவனாவது, ஒரளவு வசதிபடைத்த எனது பராமரிப்பில் இருக்கிறான். எங்காவது தொலைந்து போனாலும், எப்படியாவது அவனை என்னால் மீட்டு விடமுடியும். ஆனால் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்து, உற்றோருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தி, திக்கற்று திசையற்று திரியும் மனநோயாளி குழந்தைகளை முழுமையாய் அரவணைக்க தமிழக அரசிடம் காப்பகம் ஏதும் இருக்கிறதா? உடல் ஊனமுற்றோர், விதவைகள், முதியவர்கள், படித்த ஏழைப்பெண்கள் போன்றவர்களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசிடம் இத்தகைய சிறுவர்களையும் பராமரிக்க ஏதாவது திட்டம் இருக்கிறதா? இந்தப் பாமரனுக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழக அரசு இந்த கேள்விக்கு எனக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், இத்தகைய சிறுவர்களுக்காக புள்ளி விபரங்களில் போகாமல், ஒரு நல்ல விடையை கண்டுபிடிக்க வேண்டும்.

நவசக்தி வார இதழ் - 1999.