பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 31

போய்விட்டார். கையில் இருந்தது நாலானா பசி தாங்க முடியவில்லை. அச்சரபாக்கம் குளக்கரைக்குப் போனேன். குளத்தில் தண்ணிர் இருந்தது. ஆழம் எவ்வளவோ. காட்டுக் கொடிகளால் கை கால்களைக் கட்டிக் கொண்டு, குளத்தில் விழுந்து சாகலாமா, எவனாவது இந்த நாலணாவுக்கு விஷம் தருவானா. இரவு மணி எட்டு இருக்கும், அக்கம் பக்கம் நாதியில்லை. காட்டுக் கொடிகளை எடுக்கப் போனேன். திடீரென்று கதராடை அணிந்த ஒருவர், நான்கைந்து பேர்களுடன் வந்தார். எடுத்த எடுப்பிலேயே “நீ சமுத்திரம் தானேடா?” என்றார். நான் தலையாட்டினதும் “முட்டாள் ஒன்னை எங்கெல்லாம் தேடறது. நீ நேராய் என்னைப் பார்த்திருக்கணும். என் பெயர் சீனிவாசன். கல்வி வளர்ச்சி அதிகாரி. ரெட்டியார் என்கிட்ட சொல்லியிருக்கிறார். காட்டுக்கரனை பள்ளிக்கூடத்திற்கு நீதான் ஹெட்மாஸ்டர். சரி, வா, என் ரூமுக்குப் போகலாம். டேய். ஏண்டா அழறே.... சரி வா மொதல்ல சாப்பிடலாம்” என்றார்.

பி.ஏ. வாத்தியார்

காட்டுக்கரணை என்ற கிராமத்தில் அப்போது ஒரு சின்னக் கடை கூடக்கிடையாது. கார் போக முடியாது. அப்படியே தப்பித் தவறி போகிற கார் திரும்ப முடியாது. ஆனால் நல்ல ஜனங்கள். பஞ்சாயத்துத் தலைவர் என்னை வரவேற்று ஒரு வீட்டின் முன்னறையைத் தயாராக வைத்திருந்தார். அரிசி பருப்பு வகையறாக்களை அவரே வாங்கி வைத்திருந்தார். அப்போது எட்டாவது வகுப்பை ஈ.எஸ்.எல்.சி. என்பார்கள். அரசாங்கப் பரீட்சை எழுதியாக வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு நான் போய்த்தான் ஏ.பி.ஸி.டி. சொல்லிக் கொடுத்தேன். நல்ல ஆசிரியர் வேண்டும் என்று இந்த எட்டாவது மாணவர்கள் ஸ்டிரைக் செய்ததாலேயே, என்னை அங்கே, தலைமை ஆசிரியராகப் போட்டார்களாம். நானும், இரவு பகலென்று பாராது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தினேன். அவர்களுக்கும், நானென்றால் உயிர். பாடம் நடக்காத சமயத்தில் மாணவர்களோடு தேக்குத் தோப்புகளில் திரிவேன். காடுகளுக்குச் சென்று, நாகப் பழங்களைத் தின்பேன்.

ஊரிலும் எனக்கு நல்ல மரியாதை. எனக்கு ‘பி.ஏ. வாத்தியார் என்று பெயர். அந்த பள்ளிக்கூடத்திலேயே பழமும் தின்று கொட்டையும் போட்ட ஒரு வயதான ஆசிரியருக்கு இது பிடிக்கவில்லை. அவர், மாணவர்களை, தன் வீட்டு சமையலுக்கு பள்ளிக்கூட நேரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று