பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 133

ரத்தக்கறை வேண்டாம்,” என்று சொல்லி, என் கால்களைப் பிடித்துக் கொண்டார். நானும் “எக்கேடாவது கெட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு, பெட்டி படுக்கையை சுருட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

மாணவர்கள் கதறி அழுதார்கள். என்னிடம் லேசாகப் பிரியம் காட்டிய இரண்டு இளம் பெண்கள், கண்ணிர் மல்க நின்றார்கள். ஊர்க்காரர்கள் கூடத் தடுத்தார்கள். (கிழட்டு’ வாத்தியார்தான், நான் போகக்கூடாது என்று அதிகமாகக் கெஞ்சினார். உருண்டோடிய கண்ணிரைத் துடைத்துக் கொண்டே, திரும்பிப் பாராமல் நடந்தேன்.

மீண்டும் மீண்டும் சித்தப்பா

மீண்டும் சென்னை. மீண்டும் சித்தப்பா. மீண்டும் திட்டு. ஒரிரு மாதங்களில் தென்னாற்காடு மாவட்டத்தில், ஒர் உயர்நிலைப் பள்ளியில், ‘பி.டி. அஸிஸ்டெண்ட் என்ற வாத்தியார் வேலை கிடைத்தது. தலைமை ஆசிரியரின் தில்லு முல்லுத்தனம் (சம்பளம் சரியாகத் தராமலே கையெழுத்து வாங்கிக் கொள்பவர்) பொறுக்காமல் வெளியேறினேன்.

மீண்டும் சென்னை. மீண்டும் சித்தப்பா. மீண்டும் திட்டு, இரண்டு மாதங்களுக்குள் சீனியர் கோவாபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் வேல்ை கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில், பாய் நெசவு கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டேன். எனக்கு முன்னால் இருந்தவர், கூட்டுறவு சங்கத் தலைவரை முதலாளி என்று சொல்லிப் பழகிவிட்டார். என்னிடமும் இதை எதிர்பார்த்தார். நடக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு வந்தது.

மீண்டும் சித்தப்பா வீடு. இப்போது, அவர் என்னைத் திட்டவில்லை. தேறாத கேஸை எதுக்காகத் திட்டனும்? பேச மறுத்துவிட்டார். சித்தி, ஊரில் விவசாயத்தைக் கவனிக்கப் போய்விட்டார். பசியால் துடித்தேன். என் பெரியம்மா மகன், காக கொடுப்பான். என் ஒன்றுவிட்ட பெரியப்பா மகள் சோறு போட்டாள். எப்படியோ மூன்று மாதத்திற்குள் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி வேலை கிடைத்தது. ஸ்ரீ பெரும் புதுாரில் பஞ்சாயத்து யூனியனில் வேலை. பஞ்சாயத்துகளுக்கு, அய்யாதான் ஆடிட்டர்!

இதே சமயத்தில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில், எப்போதோ எழுதி மறந்துபோன பரீட்சைக்கு இன்டர்வியூ” வந்தது மத்திய தகவல் சர்வீஸுக்கான பேட்டி. புதுடில்லிக்கு புறப்பட்டேன்.