பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சீர்வரிசை முகமூடிகள்

எனவே, ஒரு பெண் எந்தத்தட்டில் இருந்தாலும் தனக்குச்சேர வேண்டிய சொத்தோடோ அல்லது கடனோடோ, ஒரு ஆணோடு தன்னுடைய வாழ்க்கையைத் துவக்க வேண்டும். அந்க ஆணுக்கு எப்படி தன் பெற்றோரை கவனிக்க வேண்டியது ஒரு கடமையோ, அதுபோல் இவளுக்கும், தன் பெற்றோரை கவனிக்க வேண்டியது கடமையாக்கப்பட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றும் உரிமை இவளுக்கு இருக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கமுடியாது போவதாலேயே, அவர்கள் இழிவுபடுத்தப் படுகிறார்கள். சொத்துரிமை என்ற பொருள் உரிமையோடு, அவர்கள் திருமண வாழ்க்கையை துவக்கினால், மாமியாரின் ஏச்சுக்கோ, மாமனாரின் நையாண்டிக்கோ இடமில்லாமல் போய்விடும். ஒரு லட்ச ரூபாய் சொத்தில், ஒரு பெண்ணிற்கு அறுபதாயிரம் ரூபாய் அளவிற்கு சீர் வகை செய்தாலும், இத்தகைய மாமியார்த்தனமான முணுமுணுப்புக்கள் நிலவும். அதே பெண்ணிற்கு, அவளுக்குரிய ஐம்பதாயிரம் ரூபாய் சொத்தை பிரித்துக் கொடுத்தாலோ, அதற்குரிய சந்தை விலையை வெளிப்படையாகப் பேசிக்கொடுத்தாலோ, பெண்ணுரிமை முழுதும் முன்னேறாது போனாலும் பெருமளவு முன்னேறும்.

இப்படி பட்டவர்த்தனமாக சொத்தை பங்கீடுசெய்தால், பந்தபாசத்திற்கு இடமில்லாமல் போய்விடும் என்று நினைக்கலாம். பந்தபாசத்தை மகன்கள் சொத்தாக பார்க்கும்போது, பெண்களும் அப்படிப் பார்ப்பதில் தவறில்லை. இன்றைய சீர்முறைகள் பிறந்தவீட்டிற்கு வரும் பெண்ணை தாழ்வு மனப்பான்மையில்தான் ஆழ்த்துகின்றன. நாத்தனார்களின் முகச்சுழிப்பால் இவர்கள் அனிச்சை மலராகிறார்கள். ஏழுபிள்ளை நல்லத்தங்காள் கதை இதைத்தான் எடுத்துக் கூறுகிறது. மாண்புகளை மேலோங்கச் செய்ய மரபுகளை மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய சொத்துரிமை பலத்தால், ஒரு பெண், தன்னை கணவனுக்கு இணையாக நினைக்க முடியும். இத்தகைய சொத்துரிமைதான், இவர்களுக்கு. சுயமரியாதையைக் கொடுக்க முடியும். இந்த உரிமையை மூடிமறைப்பதற்காக போடப்படும் நகைநட்டுக்கள், இவர்களை நகைப்பிற்கு இடமாகவே ஆக்கிவருகின்றன.

எனவே, இன்றைய பெண்ணியப் போராளிகள், இந்த சொத்துரிமைப் போராட்டத்தையும் தங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்வதோடு, அடித்தளப் பெண்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள இரங்கி வரவேண்டும், இறங்கியும் வரவேண்டும்.

நவசக்தி வார இதழ் - 1999.