சு. சமுத்திரம்
47
ஊழியர்கள், கடைசியர்களான பொதுமக்களிடம் தங்களைத்தாக்கிய எஜமானத்துவத்தை வட்டியும் முதலுமாகக் கொடுக்கிறார்கள். அதிகாரிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டே சாதாரண மக்களின் தலையில் கால் பதிக்கிறார்கள். ஆகையால் இந்நாட்டு மன்னர்களாக கருதப்படும் மக்களுக்கு இவர்கள் சக்கரவர்த்தியாகிறார்கள். என்றாலும் கூட்டுறவுத்துறையும், ஊரகவளர்ச்சித் துறையும் ஜனநாயகப்பட்டும், மக்களை ஜனநாயகப்படுத்தியும் வருகின்றன. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய மாறுதல். தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில சங்கம் தனது உறுப்பினர்களை சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே அரசின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியமாகிறது. இத்தகைய ஊழியர்களுக்கு சமூகப் பொறுப்பில் பயிற்சி அளிக்கவேண்டும். எளிமை இல்லாமல் நேர்மை இல்லை என்று தத்துவார்த்தமாக போதிக்கவேண்டும். இதற்கு இவர்களை மேலிட அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, சட்டமே சகலமும் என்ற மனோதளத்திற்கு கொண்டு வரவேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், தங்களை ஊழலில் இருந்து விடுவித்துக்கொண்டே, ஊழல் அரசியல்வாதிகள்-அதிகாரிகளுக்கு எதிராக ஒரு அறப்போரை மேற்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், இதற்கு ஆவன செய்ய வேண்டும். தங்களது உறுப்பினர்களை அவர்களது நியாயமான சுதந்திரத்துக்கும், பொதுமக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், சுயமரியாதையும் பேணிக்காக்கத் தயார்படுத்த வேண்டும்.
இந்தத் தோழமை வந்துவிட்டால், கீழ்மட்ட ஊழியர்களாலயே மேல்மட்ட கொள்ளைக்காரர்களைத், தூக்கி எறிய முடியும். கரையான்கள் ஒரு கட்டத்தில் சிறகு முளைத்த ஈசல்களாவதுபோல், சுயநலப்பொந்தில் லஞ்சக் கரையான்களாய் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இவர்களை சமூகநீதித்தளத்திற்கு கொண்டு வந்தாகவேண்டும். இல்லையானால் சுதந்திரம் என்பது இவர்களுக்கும், இவர்களைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் தொடர்ந்து கேலிக் கூத்தாகவே நிலவும்.
தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை — 1999.