பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


யது இல்லை; இமைக்கிமை மாறிக்கொண்டே வரும். மாவலியைச் சுற்றி விளையாடுகிறார்கள் பலர். அது நெருப்புவட்டம் போலத் தோன்றுகிறது. மாவலி ஓரிடத்தில் இருப்பது மற்றோரிடத்தில் ஓர் இமைக்குமேல் இல்லாமற் போனாலும் தொடர்ந்து வட்டம் ஒன்று சுழலுவது போல் ஒரு பொய்த்தோற்றம் நம்மை மயக்குகிறது. ஆறு ஓடிக்கொண்டே இருப்பதில் ஓரிடத்திலிருந்த நீர் அடுத்த இமையில் அங்கு இருப்பதில்லை. ஆறெனப் பேசுவது ஒரு பொய்த்தோற்றமேயாம். விளக்கில் உள்ள எண்ணெய்த் துளிகள் ஆவியாக எரிந்து அழிகின்றன. ஓரிமையில் இருந்த ஆவிஎரிஒளி மற்றோர் இமையில் இல்லை. ஆனால், விளக்கின் சுடர் ஒன்றே என்று பேசுகிறோம். இதுவும் கண்மயக்கே ஆம். காரண காரியத் தொடர்ச்சியாம் உலகம் முழுவதும் இத்தகைய பொய்த்தோற்றமேயாம். முதற்கணத்திருந்த காரணம் -சுடரோ, நீர் ஓட்டமோ- மறுகணத்து இருப்பதில்லை. மறுகணத்து எழுகின்ற காரியம் புதியது; காரணத்தில் இருந்தது அன்று. இவ்வாறு இமைதோறும் -கணந்தோறும்- மாறுவதே அடிப்படை உண்மை எனக் கூறுவதால் இவர்கள் க்ஷணிகவாதிகள் என்று பெயர் பெறுவர்.

இதனாலேயே கணிகை நோன்பினர் என்று அவர்களைச் சம்பந்தர் சுட்டுகின்றார் (2832). இந்தப்பாட்டில் கையினில் உண்பவர் எனச் சமணரையும், கணிகை நோன்பினர் என்று பௌத்தர்