பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


களையும் குறிப்பதாக‍க் கொள்ளுதல் வேண்டும். கணிசேர் நோம்பு (862) என வருவதும் கணிகை நோம்பு என இருத்தல் வேண்டும். அல்லது கணி என்பதற்கு நூல் வன்மையால் அல்லது வெற்று ஊகத்தால் நிலைநாட்டிய நோன்பு என்றும் பொருள் ஆகலாம்.

ஆனால், கணிகை என்பதற்குப் பொதுமகள் என்ற பொருளே காண்கிறோம். உவம‍ம், உவமை என அம் ஈறும் ஐ ஈறும் மாறாடுவதுண்டு. ஆகையால், இங்கு க்ஷணிகம் என்பது தமிழில் கணிகம் என்றாகிப் பின் கணிகை என்று வந்ததாக‍க் கொள்ளுதல் வேண்டும். “பொது மகளிரோடு உறவாடுபவர்” என்று பொருள் கூறுவது பொருத்தமாக‍க் காணோம். மகளிரும் துறவுபூண்டு நோன்பு நோற்கும்போது கூடா ஒழுக்கம் எழ வாய்ப்பு உள்ளதனையே இது குறிக்கின்றதென்றால் அஃது அந்த மத‍த்திற்கு மட்டும் சிறப்பென்று கொள்வதற்கில்லை. எனவே, க்ஷணிக வாத‍த்தின்படி தியானித்தலையே கணிகை நோன்பு எனக் கூறுகிறார் சம்பந்தர் எனல் வேண்டும். “கணிக நோன்பு” என்ற பாடமே இருந்திருத்தலும் கூடும்.

“குரத்திகட் பேணார்” என்பதனையும் (785) “கணிகை நோன்பினர்” என்பதனையும் ஒருங்குகொண்டு, பெண் துறவிகளும் ஆண் துறவிகளுமாக வாழ்கிற வாழ்க்கையில் இக்காலத்தும் எழும் சில கூடா ஒழுக்கத்தையே குறித்துச் சம்பந்தர் பழிக்கின்றார் என்று சிலர் கருதுகின்ற-