பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


ஏன்? ஒரு குறிப்பு இருத்தல் வேண்டும். அக்குறிப்புத்தான் என்னை?” என்றே வினா எழுகின்றது. அக் காலத்திற்கு அவை ஏற்றவையாய் இருந்தது பற்றி இறைவன் ஆக்கினான் போலும் என்ற குறிப்புப் பொருளும் இவ்வினாவுரையில் சுரக்கின்றது. இனிச் சமணர் கொள்கையை உலகிடைப் பரப்பிய மகாவீர‍ர்க்கு வர்த்தமானர் என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு. ஒருவகையால் நோக்குமிடத்து அவரே சமண் கொள்கையை ஆக்கியவர் எனலாம். இறைவனே அவ்வர்த்தமானர் என்பது பட,

“சாமகீதர் வர்த்தமானர் சண்பை நகராரே”
                                             (1.66.10.4)

எனப் பாடுகின்றார் சம்பந்தர். சமண் சாக்கியமாக்கியவ்ன இறைவனே என்பதைப் பின்னும் இவ்வாறே வற்புறுத்துகின்றார்.

அவர்கள் வழிபாடும் சிவ வழிபாடே அவர்கள் உரையாடலும் இறைவனுரையே; அவர்கள் மறவுரையும் அறவுரையே; அவர்கள் கொள்கையை நிலைநாட்டியவனும் ஆண்டவனே! அம்மட்டோ? எல்லாம் இறைவன் வடிவாயபோது சமணரும் புத்தரும் மற்றையோரும் அவன் வடிவே அன்றோ?

“போழம் பலபேசிப் போது சாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்
கேழல் வினைபோக‍க் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட் டெம்மடிகளே.”

என்று பாடுகின்றார் சம்பந்தர்.