பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


அத்தகு பொருள் உண்டும் இல்லையும் என்று
நின்றவர்க்கு, அச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்து வாதிலழித் தெழுந்த கவிபெயர்ச்
சத்திரத்தில் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமேனி
சித்திர‍ர்க் கெளியே னலேன்
திருவால வாயரனிற்கவே.

எனப் பாடுகின்றார் சம்பந்தர்.

“ஒரு பொருள் ‘உண்டா?’ என்றால் ‘உண்டு’ என்றோ, ‘இல்லை’ என்றோ கூறாது, “ஒருவகையால் உண்டு ஒரு வகையால் இல்லை” என்று ஒத்ததும் ஒவ்வாத‍தும் ஒன்றாய்க் கூறி எதிர்நின்று உரையாடுவர். இவர்களது பேருரை கண்டு அச்சம் கொள்ள மொழிவர். கவி எனும் பெயருடைய சத்திரத்தில் பன்முறை எதிருரையாடுவர். இவர்களது உரையினைக் கேட்டு மக்கள் சோம்பி நிலைகெட்டு வெட்குற, உடையலாத ஒரு வடிவினை உடையவர். இவர்களுக்கு நான் தோற்பவன் அல்லேன்” என்று சம்பந்தர் பாடுகின்றார். இவ்வாறு உறுதி கொண்டு வந்தமை நோக்கியே இவர் தங்கிய இடத்தில் தீ வைத்தார்கள் எதிரிகள்.

இவற்றை எல்லாம் கண்ட சைவர்கள் மனம் எவ்வாறு புழுங்கியிருக்கும்? ஆனால், சம்பந்தரோ “சமணர்கள் அறியாமையால் இங்ஙனம் ஒழுகுகின்றனர். இது கேட்டு வெகுளாதீர்கள். சிவனடியாருக்கு ஒரு குறையும் இல்லை. உங்கள் வேலையைச் செய்யுங்கள்” என அவர்கள் சினத்தை ஆற்றுவிக்கின்றார். இப்பெரியாரின அன்பிருந்தபடி என்னே! என்னே!