பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


குண்டருங் குணமிலாச்சமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்தவல்லார் துயர் தோன்றாவே.

என்றும்,

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையினானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையினான் அடி கூறுமே.

என்றும் பாடுதல் காண்க.

“அயிலால் போழ்ப அயில்”

என்றபடி அவர்கள் வழியே சென்று அர்களோடு எதிருரையாடி வென்று அவர்களது தீயொழுக்கத்தை அழிக்கக் கடவுளை வேண்டுகின்றார் சம்பந்தர். அதற்கும் திருவருள் விடைதர வேண்டுமென எண்ணி முன் கூறியபடி ஒரு முறைக்கு இருபது முறை இறைவனை வேண்டி நிற்கின்றார். அருகர்களோடு எதிருரையாட இறைவனது திருவுள்ளத்தை அறிய நின்ற அந்நிலையில் யாது வேண்டுகின்றார் சம்பந்தர்?

‘எய்தி வாதுசெயத் திருவுள்ளமே’

என்று விடை கேட்கின்றார். அவர்கள் அடைதற்கும் விடை வேண்டும். அவர்கள் ஒருபுறம் நிற்க அவர்களோடு பேச்சென்ன என்பதே இவர் எண்ணிய பொதுநிலை. அன்னோர் செய்யும் கொடுமையை நினைந்து அவற்றைச் ‘சீறி வாது செயத் திருவுள்ளமே’ என மேல் வினவுகின்றார்.