பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


தென்னாட்டில் எங்கும் எழத்தொடங்கின. அவ்வகையால் கல்லேடுகள் நிலைபெற்று விளங்கத் தொடங்கின. அவனுடைய காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டு வரலாறு ஏறக்குறைய ஒரு கோவையாக‍க் கல் ஏட்டின் நின்றும் செப்பேட்டின் நின்றும் பலராலும் கற்கப்படுகின்றது. அவ்வேடுகளிலும், இக்கழுவேற்றிய கதை குறிக்கப்படவில்லை. எண்ணாயிரவரைக் கழு ஏற்றியமை, குறித்து வைத்துக் கொள்ளத் தக்கதன்றோ! அதைப்பற்றிய குறிப்பொன்றும் காணக் கிடைக்கவில்லை என்றால், ‘அது நடக்கவில்லை’ என்றே முடிவு செய்ய இடமில்லையோ? சம்பந்தர் காலத்தில் ‘ஹியூன்ஸியாங்’ என்ற சீன நாட்டுப் புத்தர் ஒருவர் நம் நாடு முழுதும் நேரே சுற்றிப் பார்த்துத் தாம் கண்டவற்றை ஒரு நூலாக எழுதி வைத்துப் போயினார். ஹியூன்ஸியாங், புத்தர் கொள்கை அதன் தாயகமாகிய நமது நாட்டில் எவ்வாறு வழங்கி வருகிறது என்பதை நேரே அறியவும், அதைப்பற்றிய நூல்களைத் தேடி எடுத்துச் செல்லவும் வந்தவர். புத்தர்களது நிலையை எடுத்து நன்கு அஅவர் கூறுகின்றார்; அவர் நாளில் புத்தர்கள் நிலை சீர்கெட்டிருந்ததை விளக்குகின்றார்; பிற கொள்கையினர் சிறப்புடன் விளங்குவதை எடுத்துக் காட்டுகின்றார்; அப்பிற கொள்கையினரது தீச்செய்கைகளையும் தீய வழக்கங்களையும் குறிப்பிடுகின்றார்; வங்க நாட்டில் காளியை வழிபடுவார் தம் கடவுட்கு மக்களையே கொன்று மகிழ்வூட்டுவதை