சி. பி. சிற்றரசு
23
இவன் யார்?
யார் இந்த சாணக்கியன் ? தென்னாட்டில் கேரளப் பகுதியிலே எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து வடக்கே சென்று எப்படியோ நவநந்தர்களின் அபிமானத்துக் குறியவனாக அல்லது அவர்களிடமே ஏதோ ஒரு மதிக்கத்தகுந்த, அல்லது அரசர்கள் பழகிவைத்துக் கொண்டிருந்த பலவித கெட்ட பழக்கங்களுக்குத் தேவைப்பட்ட பலவிதமான ஆட்களிலே சாணக்கியனும் நந்தனின் தனிப்பட்ட அபிமானத்துக்குறியவனாக இருந்திருக்கவேண்டும் என்பது மட்டிலும் புலப்படுகிறது. இல்லையானால் கண்ட நேரத்தில் அரண்மனையின் எந்த பக்கங்களிலும் திரிந்துகொண்டிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான். இவனுடைய தாய் தந்தையர்கள் பெயர் தெரியவில்லை. நந்தர் மாளிகையிலிருந்த இவன் ஓர் நாள், அரச குடும்பத்தார் குளிப்பதற்காகத் தனியாகக் கட்டப்பட்டிருந்த குளத்தில் குளித்தான். இதைக்கண்ட நந்தன் வெகுண்டு சாணக்கியனை வெளியேற்றினான். சினங்கொண்ட சாணக்கியனுடைய கண்கள் அக்கினி கோளங்களாய்விட்டன. தான் குளிக்கும் போது அவிழ்த்துவிட்ட குடுமியை முடித்தானில்லை. ஒரு சாதாரண ஆரியன். நந்தன் தயவால் வாழ்ந்தவன். எனினும் நந்தராட்சியை ஒழிக்கத்திட்டமிட்டு, 'என்னை அவமானபடுத்திய அறிவிலிகளே ! உங்களை உங்கள் அரியாசனத்திலிருந்து கீழே இழுத்துத் தள்ளும்வரை என் குடுமியை முடிப்பதில்லை' என தன் நெஞ்சம் அதிர சூள் உரைத்துக்கொண்டான். மன எரிச்சலைத் தாங்காது தீமிதித்தவன் போலானான். எப்படி நந்தராட்சியை முடிப்பது. இவன் மேலிருக்கும் ஆத்திரத்தால் வேற்று நாட்டானைக் கொண்டுவந்தால், வருபவனுடைய ஆட்சி