பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழித்தொதுக்குதல் எத்துணை மடமைச்செயல் ஆகும். இதனை மடமைச் செயல் என்று அறிந்தும் அதனை விலக்கி யொழிக்கமாட்டாமல் பேணி வருவது முன்னையினும் எத்துணை மடமைச் செயலாம்.

இறைவன் ஒருவன் உண்மையாயின், எல்லாச் சமயங்களும் அவ்விறைவனையே நாடிப் போகின்றன என்பதும் உண்மையாயின், பல சமயங்கள் இருத்தலும், அச்சமயக் கணக்கர் தம்வாழ்நாள் முழுவதும் மக்கட்கு வாழ்வுத் தொண்டாற்றுவது பற்றி எள்ளின் மூக்கத்துணையும் எண்ணாது, தந்தம் சமயமேம்பாடுகளையே கூறி வானாளை வீணாளாகக் கொண்டு, உண்டு, உறங்கிக் கொழுத்துப் புழுத்து வீழ்தலும் எற்றுக்கோ வென்று அறியோம். இவ்வீணுரைப் போலிப்புறச் சமயங்கட் பட்டோரும் ஒருவர்க்கொருவர் தாம் தம்மை உயர்ந்தோர் என்னலும் இன்னொருவரைத் தாழ்ந்தோர் என்னலும், அறிவியல் முன்னேறி கோளெய்தி (Rocket) தோன்றிய இக்காலத்துக்கும் ஏற்றதாகுமோ? அறிஞரே ஒர்ந்து தெளிமின்.

சாதி என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் காணாத ஒரு சொல்லாம். திருக்குறள் முதலிய அறநூல்களில் குலம், குடி என்று வருகின்ற சொற்களும் சாதி என்ற பிறப்புப் பிரிவை உணர்த்தா. இவற்றிற்கு உரை செய்தோர் சமயத்தாலும், சாதியாலும் மடமை எனும் படுகுழியில் வீழ்த்தப்பட்டவரே யாதலின், அவரவர் போக்கிற்கியைய வீணுரையே செய்து போந்தார். தமிழில் உள்ள பழைய நூலான தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கும் மக்கட் பாகுபாடுகள் பெரும்பாலும் தொழில் பற்றியவாயினும், ஆரியரின் புரையோட்டக் கருத்துக்கள் தழுவியனவேயாம்.

வெளிநாட்டாரை "நீவிர் யாரோ?" வெனின், அவர் சமயம்பற்றிக் கிறித்துவர் என்றோ யூதர் என்றோ, அற்றாயின் நாடு பற்றிச் சீனர் என்றோ அமெரிக்கர் என்றோ, அதுவுமின்றி மொழிபற்றி ஆங்கிலர் என்றோ, பிரெஞ்சியர் என்றோ கூறி நிற்ப, இப்பாழுந் தமிழரோ நீவிர் யாவர் எனின், மொழிபற்றித் தமிழர் என்றும் கூறாது, நாடுபற்றிச் சென்னையர், மதுரையர் என்றும் கூறாது, சமயம்பற்றிச் சைவர், வைணவர் என்றும் கூறாது, யாம் தென்னிந்திய சைவவேளாளர் குடிப்பிள்ளைமார் என்றும், முதலிமார் என்றும், தருக்கோடும் செருக்கோடும், கூறுவதன்றி, ‘யாம் இவர் குடியிற் பெண் கொள்ளோம்', என்றும் ‘யாம் இவர் வீட்டுத் திண்ணையிலும் ஏறோம்' என்றும் அறிவிலாது புல்லுரை புகல்வர்.

இச்சாதிச் சமயச் செருக்குகள் இவற்றோடமையாது வேற்றுமையையும், பலமூடப் பழக்க வழக்கங்களையும் இந்நாட்டார் தம் மூளையில் வேர்விட்டு முளைத்துக் கிளைக்கவும் நல்ல எருவாகவும் பயன்படுகின்றன.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/27&oldid=1164331" இலிருந்து மீள்விக்கப்பட்டது