பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

வீழ்ந்தார் ஒவ்வொருவரும் தத்தம் உயிரைக் காத்துக் கொள்வதிலேயே கருத்துடையதாகி விட்டமையாலும், கவிழ்ந்த கலத்தின் உறுப்புக்களிற் கையிற் கிடைத்ததைப் பற்றிக் கரைசேர்ந்த சிலரும் ஒரே துறையிற் கரையேறாது, அலைகள் ஈர்த்துச் சென்றவாறெல்லாம் இழுப்புண்டு, அவை கொண்டு சேர்த்த இடங்களிற் கரையேறினராத லாலும், கடலில், வீழ்ந்தவருள், கடல் நீரில் ஆழ்ந்து உயிரிழந்து போனவர் எத்துணைவர்? அவர்கள் யார் யார்? உயிர் பிழைத்து ஊர் சேர்ந்தவர் எத்துணைவர்? அவர்கள் யார் யார்? என்பதை அறியாராயினர். அதனால் ஒவ்வொருவரும் தம்மையொழிந்த ஏனையோரெல்லாம் கடல் நீர்க்குப் பலியாயினர் என்றே நம்பினராதலின், அவர்கள் கலம் கவிழ்ந்ததை அறிவித்து, “ஆதிரை உன் கணவன் ஆழ்கடல் நீரில் அழுத்தி அழிந்து விட்டான்” என்று கூறி, அவள் நிலைக்கு இரங்கினர்.

கணவன் கடல்வாய்ப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டாள் ஆதிரை; அவ்வளவே, அவள் அகம் ஆறாத் துயரக் கடலில் ஆழ்ந்துவிட்டது. ஆதிரை, தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெரியோள். கணவணோடு கூடி இல்லறக் கடனாற்றித் தன்னால் இயன்ற அளவு பிறவுயிரோம்பும் பேரற வாழ்வை விரும்பியவள் அவள். அவ்வாழ்வு என்றேனும் வாய்க்கும் என்ற நம்பிக்கையி னாலேயே, அவள் அதுகாறும் உயிர் வாழ்ந்திருந்தாள். அதனாலேயே, கணவன் தனக்கு வாழ்வு அளிக்கத் தவறிப் பரத்தையர்க்கு வாழ்வு அளித்து வாழ்ந்த இழி வாழ்வையும் தாங்கிக்கொண்டாள். அதனாலேயே “கணிகையர் தொடர்பைக் கைவிட்டு என்னை வந்தடைந்த கணவனை ஓர் இமைப்பொழுதும் பிரியவிடேன்; பிரிவின்றி வாழ்ந்து பேரின்பம் காண்பேன்” என நினையாது