பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

முன்வந்தது அவள் உள்ளம். ஊர்ப் பெரியோர்களே ஒன்று கூட்டித் தன் உள்ள விருப்பத்தை அறிவித்தாள். தீப்பாய்ந்து உயிர் துறக்கத் துணைபுரியுமாறு அவர்களை வேண்டிக்கொண்டாள். ஆதிரையின் உள்ளத்துறுதி உணர்ந்த அவ்வான்றோர் அவள் வேண்டுகோட்கு இணங்கினர்.

சுடுகாட்டிற் காய்ந்துலர்ந்த காட்டுவிறகினல் ஓர் ஈமப்படுக்கை அமைக்கப்பட்டது. தீயும் மூட்டப்பெற்றது. முற்ற உலர்ந்த விறகாதலின், தீ செந் நாக்கெழ ஓங்கி எரிந்தது. ஆதிரை தண்ணெனக் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுந்தாள். புத்தாடை உடுத்துக் கொண்டாள். மணம் வீசும் சந்தனக் குழம்பைவாரிப் பூசிக் கொண்டாள். ஈரம் புலராக் கூந்தலில் இனிய மணமிகு மலர்களைச் சூடிக் கொண்டாள். இக் கோலத்தோடு இடுகாட்டை அடைந்தாள். ஈமத்தீயை மும்முறை வலம் வந்தாள். “அங்கியங் கடவுளே! என் கணவன் சென்ற உலகிற்கு என்னையுங் கொண்டு சென்று, அவனோடு ஒன்றுபடுத்துவாயாக” என வேண்டிக் கொண்டாள். ஆங்குக் குழுமியிருந்த புகார் நகரத்துப் பெருங்குடி மக்கள், அக்காட்சியைக் கண்டு கண்ணீர் சொரிந்து கலங்கினர். ஆதிரை அகமகிழ்வோடு தீப்பாய்ந்து விட்டாள்.

ஆதிரையின் அழகுத் திருவுருவம் வெந்து சாம்பலாகும் காட்சியைக் காணமாட்டாது, கூடியிருந்தோர் கண்களை மூடிக்கொண்டனர். ஆனால் அவர் எதிர் நோக்கியவாறு எதுவும் நடைபெறவில்லை. ஓங்கி எழுந்த தீ ஆதிரை உட்புகுந்ததும் அடங்கி அவிந்தது. உடுத்த புத்தாடை பற்றி எரியவில்லை. பூசிய சந்தனம் புலரவில்லை. சூடிய மாலை வாடவில்லை. புத்தாடை பொன்னிறம் பெற்றுப் பொலிந்தது. சந்தனம் தண்ணெனக் குளிர்ந்து