பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வாழ்ந்தாள். ஆதிரையின் கற்பின் திறம் கண்டு, புகார் நகரத்துப் பெண்களும் ஆண்களும் அவளை வியந்து பாராட்டி, வந்து வணங்கி வழிபட்டுச் செல்லத் தலைப் பட்டனர். இவ்வாறு கற்புடை மகளிரும் போற்றும் கவின் மிக்க வாழ்வினளாய், ஆதிரை கணவனே எதிர்நோக்கி வாழ்ந்திருந்தாள்.

கரை சேர்ந்த சாதுவன் கடலில் அலைப்புண்ட களைப்பு மிகுதியால், கரைக்கண் இருந்த ஒரு மரத்தடியில் மெய்ம்மறந்து கண்ணயர்ந்திருந்தான். அவன் கரை சேர்ந்த அத்தீவு, நாகர் எனும் இனத்தவர் வாழும் ஒரு மலைநாடாம். அவர்கள் நாகரிகம் அறியாதவர். ஆடை அணியும் அறிவு பெறாதவர்: பொன்னும் நவமணியும் போலும் பொருள்களின் பெருமை அறியாதவர். ஆரமும் அகிலும் தரும் மணத்தை நுகரும் மதியிலாதவர்; கிடைத்த இறைச்சி எதுவே யாயினும், அது மாவின் இறைச்சியே யாயினும், மக்கள் இறைச்சியேயாயினும், உண்டு உயிரோம்பும் ஒரு காட்டினத்தவர். கள் குடிப்பது, காட்டு விலங்குகள், கலங் கவிழ வந்து கரையேறும் மக்கள் இவர்களைக் கொன்றுண்பது, இளம் பெண்களோடு கூடி வாழ்வது; இவையல்லாது வேறு வாழ்வறியாதவர். கடற்கரை மணலில் வீழ்ந்து கிடக்கும் சாதுவனை அவர்கள் பார்த்துவிட்டனர். உண்ண நல்ல உணவு. கிடைத்தது என எண்ணி மகிழ்ந்தனர். அறுசுவை நுகரும் ஆர்வம் மிக, அவ்வுணவைச் சுற்றி அமர்ந்திருப் பார் போல் அவர்கள் அவனைச் சுற்றி நின்று “தனியே வந்துளான்; மிகவும் வருந்தியுள்ளான்; நனிமிக இரங்கத் தக்கான்; நமக்கு நல்ல உணவாவான்” எனக் கூறி ஆரவாரித்தனர்.