பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


நாகர் எழுப்பிய ஆரவாரத்தால், சாதுவன் உறக்கம் கலைந்துவிட்டது; நல்ல காலம்; சாதுவன் அவர்கள் மொழியை அறித்திருந்தான். அதனால் அவர் உரைத்த வற்றை உணர்ந்தான்; அவன் உள்ளம் அச்சத்தில் ஆழ்ந்தது. ஆயினும் அதை அவர் அறியாவாறு அடக்கிக்கொண்டு, அவர் விரும்பும் வண்ணம், அவர் மொழியில் அவரோடு உரையாடினன். தங்களைத் தவிர, வேறு நாகரிக மக்கள் எவரும் தங்கள் மொழியைப் பேசக் கேட்டறியாத அந்நாகர், சாதுவன், தங்களோடு தங்கள் மொழியில் உரையாடக் கேட்கவே, அவனைககொன்றுண்ணும் கருத்தைக் கைவிட்டு, அவன்பால் பெருமதிப்புக் கொண்டனர். அகன்று நின்று அவனைத் தொழுதனர். “எம்மொழியறிந்து பேசவல்ல பெரியோனே! நாங்கள் நவில்வதைக் கேளாய். அகநாட்டில் உள்ள மலைமீது, எங்கள் குருமகன் உள்ளான். அவன்பால் வந்தருள் புரிக” என வேண்டிக்கொண்டனர். சாதுவனும், அவர் வேண்டுகோளை ஏற்று அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.

மதுக்குடங்களும், முடைநாற்றமும், எலும்புக்குவியலும் எங்கும் விரவிக்கிடக்க, அவற்றின் இடையே அமைந்ததொரு மேடைமீது, கரடி தன் காதற்பிணவோடு கூடியிருப்பதுபோல், உடலெல்லாம் மயிர்கள் அடர்ந்திருக்க, மனைவியோடு வீற்றிருந்த நாகர் தலைவன் முன் சாதுவனைக் கொண்டு நிறுத்தினர். சாதுவன் நாகர் குருமகனைக் கண்டான்; சிறிது நாழிகைக்கெல்லாம், நயமாகப் பேசி அவனையும் தன்வயத்தனாக்கிக்கொண்டான்; நாகர் தலைவன் சாதுவன்பால் அன்பு கொண்டு விட்டான். அவனே அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டான். “நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?” என அன்போடு வினவினான். சாதுவன் நிகழ்ந்ததைக்