பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கூறினான். உடனே நாகர் தலைவன், நாகர் சிலரை விளித்து, “நம்பி, கடலில் அகப்பட்டுக் கேடுற்று வந்துள்ளான். இவன் வருத்தம் தீர, மதுவும் மாவின் இறைச்சியும் தாருங்கள்; இவன் மனம் மகிழும் வண்ணம் வேண்டுவன பிறவும் குறைவின்றிச் செய்யுங்கள்” எனப் பணித்தான். நாகர் தலைவன் கூறியதைக் கேட்ட சாதுவன், காதுகளைக் கைகளால் பொத்திக்கொண்டு, “அந்தோ! கேட்கத் தகாதன கேட்டுவிட்டேன். அன்ப நீ தரும் எதையும் யான் வேண்டேன்” என வெறுத்துக் கூறினான்.

சாதுவன் மதுவையும் மங்கையையும் மறுப்பது கண்ட குருமகன் கடுஞ்சினம் கொண்டான். “என்னால் அளிக்கக் கூடியனவற்றுள் தலையாயவற்றை அளிக்க முன் வந்தேன்; இவன் மறுத்துவிட்டான். நான் அளிக்க மறுப்பவரும் இவ்வுலகில் உளரோ! மறுத்தவர் உயிர் பிழைத்தலும் உண்டோ” என எண்ணிச் சினந்தது அவன் உள்ளம். உடனே சாதுவனப் பார்த்து, “புதியோனே! கள்ளும் கன்னியரும் இன்றி உயிர் வாழ்தல் உண்டோ? அவற்றினும் உயர்ந்தது உலகத்தில், உளதோ? உளதெனின் அதை நாங்கள் அடைதல் வேண்டும்; எமக்கு அதை இன்றே காட்டு” வெகுண்டு கூறினன்.

அறியாமை காரணமாகச் சினம் கொள்ளும் நாகர் தலைவன் நிலைகண்டு, சாதுவன் அவன்பால் இரக்கம் கொண்டான். அவனுக்கு அறிவூட்ட எண்ணினான். “நாகர் குலத்தலைவ! கள் அறிவைக் கெடுக்கும், கொலை அருளை அழிக்கும் என உணர்ந்து, உண்மை நெறிகண்ட உரவோர், அவற்றை அறவே களைந்து கைவிட்டனர். பிறந்தவர் இறப்பர்; இறந்தவர் பிறப்பவர்; இது உலகியல்