பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

உண்மை. உறங்கலும் விழித்தலும் போல், இறப்பும் பிறப்பும் இயல்பாய் நிகழும். இப்பிறவியில் நல்லறம் புரிந்தவர் மறுபிறவியில் இறவாப் பேருலகம் அடைந்து இன்புறுவர். இப்பிறவியில் கள்ளுண்டும், காம வெறி கொண்டும் அலைந்தவர், வரும் பிறவியில் நரகடைந்து அழிவர். இதை உணர்ந்தமையால், பெரியோர்கள் கள்ளையும் காமத்தையும் கை விட்டனர். இதை நீ உணரின் உயர்வாழ்வு பெறுவாய்” என உரைத்தான்.

சாதுவன் கூறிய நல்லுரை கேட்ட குருமகன் பேரொலி எழுப்பி நகைத்தான். பின்னர் சாதுவன நோக்கி, “வங்கம் ஊர்ந்து வந்த வணிக! உடலை விட்டு ஒடும் உயிர் மீண்டும் ஓர் உடலிற் சென்று புகும் என்கின்றனேயே! அது நடக்கக் கூடியதாமோ? கூடுமாயின் அது எங்ஙனம்? நான் அறிய நன்கு உரைப்பாயாக” என்றான். நாகர் தலைவனின் அறியாமை கண்டு அவன் பால் இரக்கங்கொண்ட சாதுவன், “குருமகனே! கூறுகிறேன்; கோபம் கொள்ளாது கேள். உடலில் உயிர் நிற்கும்போது உடல் தனக்கு நேரும் சிறு துன்பத்தையும் உணருகிறது. அவ்வாறு உணரும் அவ்வுடல், உயிர் நீங்கப்பெற்ற பின்னர்ப், பெருநெருப்பில் இட்டுப் பொசுக்கினும், அது அத்துன்பத்தை உணருவதில்லை. அதனால் அந்நிலையில், உடலுக்கு உண்டாம் ஊறுபாட்டினை உணரும் ஒன்று, அவ்வுடல்விட்டு நீங்கிவிட்டது. என்பது புலப்படுமன்றோ? அவ்வாறு நீங்கியதே உயிராம். குருமகனே! இன்னமும் கேள். ஓர் இடத்தைவிட்டு ஒடியவர் எப்போதும் ஒடிக்கொண்டே இரார். இறுதியில் யாண்டேனும் ஒரிடத்தில் உட்கார்ந்தே திருவர். இது. உலகியல் உண்மை. இவ்வுண்மையை நான் மட்டுமன்று, இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் உணர்வர்.