பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

உனக்கு யாங்கள் என்ன கைம்மாறு செய்யவல்லேம்? ஐய! இவ்வழி வரும் கலங்களைக் கவிழ்த்துக் கொள்ளை யடித்துக் குவித்து வைத்த அகில், ஆரம், அருமணிகள் அளவிலாதன உள. அவற்றை உடன்கொண்டு சென்று ஊரடைந்து இன்புறுவாயாக” எனவேண்டி, அவ்வான் பொருகளை அவன்பால் ஒப்படைத்தான். சின்னாட்களுக் கெல்லாம், சந்திர தத்தனுடைய வங்கம் அவ்வழியாக வந்தது: நாகர், அதைத் தடுத்து நிறுத்திச் சாதுவனயும், தாம் சேர்த்தளித்த செல்வங்களையும் அதில் சேர்த்து வழியனுப்பினர்.

சாதுவன், செல்வத்தோடு புகார் வந்து சேர்ந்தான். கணவன் வரவை எதிர்நோக்கியிருந்த ஆதிரை, அசரீரி கூறியவாறே, அவன் உயிர் பிழைத்து வந்ததோடு, உறு பொருளும் உடன் கொண்டு வந்தமைகண்டு களிப்புற்றாள். கணவன் ஈட்டி வந்தளித்த இரு நிதியை, வருவார்க் கெல்லாம் வாரி வழங்கி, விழுமிய வாழ்வு வாழ்ந்தாள். ஆதிரையின் கற்பின் திறம் கண்டு பாராட்டிப் பெருமையளித்த காவிரிப்பூம்பட்டினத்துப் பெருங்குடி மக்கள், அவளாற்றும் இல்லறச் சிறப்பின் இனிமையையும் கண்டு வியந்து பாராட்டினர்.

ஆதிரை மனத்தக்க மாண்புடையவளாய் வாழ்ந்திருந்தாள். அப்போது, அவள் பெருமையைப் பார் அறியப் பண்ணும் பெருஞ்செயல் ஒன்று நிகழ்ந்தது. புகார் நகரில் பரத்தையர் சேரியில் மாதவி என்பாள் வாழ்ந்திருந்தாள். அவளுக்கு மணிமேகலை எனும் பெயர் பூண்ட மகள் ஒருத்தி இருந்தாள். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் ஒட்டுப் பற்றற உலகத்தைத் துறந்த உரவோர்களும் வியக்கும் வகையில் துறவு வாழ்க்கை மேற்கொண்டு விளங்கினாள். அவள், ஒருநாள் மணி