பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பல்லவம் சென்றிருந்தபோது, ஆங்குத் தெய்வத் திருவருளால் அமுதசுரபி எனும் பெயர் வாய்ந்த பிச்சைப் பாத்திரம் ஒன்று கிடைத்தது. அமிழ்தம் நிகர் உணவை அள்ள அள்ளக் குறையாது அளிக்கும் அருமை வாய்ந்தது அது. மணிமேகலை, புகார் நகரத்து மக்களைப்பற்றி வருத்தும் பசிப்பிணியை அதன் துணையால் போக்க விரும்பி, அவ்வமுத சுரபியோடு வீதியில் புகுந்தாள். அப்போது அவளுடன் இருந்த காயசண்டிகை எனும் பெயர்பூண்ட அவள் தோழி, அவளுக்கு ஆதிரையின் வரலாற்றை விளங்க உரைத்து, “மாபெரும் பாத்திரம் பெற்ற மடக்கொடி! அவ்வாதிரை, இவ்வமுத சுரபியில் முதற் பிச்சையிடின், அது அள்ள அள்ளக் குறையாது ஆருயிரை ஒம்பும். ஆகவே மணிமேகலை! முதற்கண் அவள் மனை சென்று பிச்சையேற்றுப், பின்னர்ப் பசிப்பிணி ஒழிக்க முற்படுவாயாக” என வேண்டிக் கொண்டாள்.

மணிமேகலை ஆதிரையின் பெருமையறிந்து அவள் பால் வழிபாட்டன்பு கொண்டாள். உடனே கையில் அமுதசுரபியோடு ஆதிரையின் மனை முன் சென்று, ஆடாது அசையாது நின்றாள். ஆருயிர் ஒம்பும் அருமை வாய்ந்த அமுதசுரபியில் முதற் பிச்சையிடும் மாபெரும் பேறு தனக்கு வாய்த்தமை கண்டு ஆதிரை அகம்மிக மகிழ்ந்தாள். மனைமுன் வந்து நிற்கும் மணிமேகலையை வலம்வந்து “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக” என வாழ்த்தி அமுதசுரபி நிறைய, ஆருயிர் மருந்தாம் அமுதை அள்ளி அள்ளி இட்டாள்.