பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. ஆபுத்திரன்

வாரணாசி என வழங்கப்பெறும் காசிமாநகரில் அபஞ்சிகன் எனும் அந்தணன் ஒருவன் வாழ்ந்திருந்தான். நான்மறைகளை நன்கு கற்று அவற்றின் உட்பொருளை விளங்க விரித்துரைக்க வல்லவன் அவன். அதனல் அவனை அருமறை ஆசிரியன் என அனைவரும் பாராட்டிப் பெருமைசெய்தனர். ஆரணம் அறிந்த பெரியோனாகிய அவனுக்குப் பிறர் முன் ஏறுபோல் பீடு நடை நடக்கும் பெருமை இல்லாயிற்று. அவனுக்கு மனைவியாக வாய்த்தவள்பால் மனமாட்சிக்குரிய மாண்புகள் இலவாயின. சாலி எனப் பெயர் பூண்ட அப்பார்ப்பனி, பிறப்பொழுக்கம் இழந்து பெரும்பழி பூண்டாள். கற்புநெறி தவறிக் கணவனுக்குக் குற்றம் இழைத்தாள்.

நனி இளமைப் பருவத்தில், அறியாமையால் நெறி தவறிவிட்ட அவள், பின்னர்த்தன் பிழையை உணர்ந்தாள். அப்பிழையால் தனக்குக் கேடு நேர்வதோடு, கணவன் வாழ்விற்குக் களங்கம் நேர்ந்துவிட்டதை உணர்ந்து உள்ளம் வருந்தினாள்; பிழை தீர யாதேனும் வழியிராதா என ஏங்கினாள். தமிழகத்தின் தென்கோடிக் கண்ணதாய குமரி முனையில் நீராடினல் குற்றம் தீரும் என அறிந்தார் சிலர் கூறக்கேட்டாள். குமரித் துறை நீராடும் நினைவே நெஞ்சில் நிலைத்து நிற்க, அது வாய்க்கும் நாளை எதிர்நோக்கியிருந்தாள். அந்நிலையில் வாரணாசி வாழ்வார் சிலர், வடநாடு நீங்கித் தென்னாடு செல்கின்றனர் என அறிந்தாள். உடனே, அவரோடு தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டு விட்டாள்.