பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

புண்ணிய நாளன்று தோன்றும் நன்னிமித்தங்கள் அனைத்தும் அன்று தோன்றக் கண்டு, சாவக நாட்டு மக்கள் வியந்து மகிழ்த்தனர். சக்கரவாளக்கோட்டத்தில் வாழும் தேவர்கள், இயற்கையை ஏவல் கொள்ளும் அவ்வின்ப நிகழ்ச்சிக்காம் காரணம் காணாது விழித்தனர்.

மண்முக முனிவன் தவப்பள்ளியில், ஆவொன்று ஓர் ஆண்மகனே ஈன்றுளது; பிறந்த மகனுக்கு பேரரசாகும் பேறுளது. அவன் ஆளும் நாடு மழை மளம் மிக்கு மாண்புறும் என்ற செய்தி, அச்சாவக நாட்டு மன்னன் பூமிசத்திரன் செவிக்கு எட்டிற்று. மகப் பேறில்லாமல் மனத்துயர் கொண்டிருந்த அம்மன்னவன், ஆயீன்ற அம்மகனைத் தன் மகனாக ஏற்று மன்னனாக்க விரும்பினான். உடனே தன் மனைவி அமரசுந்தரியோடு, தன் அரசிருக்கையாம் நாகபுரத்தின் நீங்கித் தவளமால் வரை அடைந்தான். இருவரும் மண்முகன் தவப்பள்ளி அடைந்து அவனை வணங்கினர். ஆவையும், அஃது ஈன்ற ஆண் மகவையும் கண்டு அகமகிழ்ந்தனர். “மாதவ! மக்களை இல்லேன். நீ அருளின் புதல்வனைப் பெற்ற பேறுடையனாவேன்?” எனத் தன் வேட்கையை வெளியிட்டான். மன்னவன் மனக்குறிப்பறிந்து முனிவனும் இசைந்தான்.

அரசனும் அரசியும் ஆவின்ற மகனைத் தாமீன்ற மகனென மதித்து மகிழ்ந்து தம் அரண்மனைக்குக் கொண்டு சென்றனர். அவனுக்குப் புண்ணியராசன் எனப் பெயர் சூட்டிப் பேரன்பு காட்டிப் பேணி வளர்த்தனர். அரசர்க் குரிய அரிய கலைகள் அனைத்தையும் அவனுக்கு அறிவித்தனர். பின்னொருநாள், அவனை மன்னனாக்கி மகிழ்ந்தனர். புண்ணியராசன் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டான்.