பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இந்நல்லாள்?” என வினவினான். காவலனைத் தொடர்ந்து வந்த கஞ்சுகன், அவனை வாழ்த்தி வணங்கி, “நாடாள் வேந்தே! நாவலந்தீவினள் இந்நங்கை. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர் வொழுக்க நெறியினள். இவள் பெயர் மணிமேகலை. சோணாட்டுக்காவலன் கிள்ளி வளவனோடு நட்புக்கொளவேண்டி, முன்னம் ஒரு நாள் என்னை, மன்னவ! அவன்பால் அனுப்பினாய் அல்லவோ? அப்போது கலம் ஏறிக் கடல் கடந்து காவிரிப்பூம்பட்டினம் சென்ற யான், ஆங்கு அறவண அடிகள் உரைக்க, இவள் பெருமையை அறிந்து வந்தேன். அதை அடியேன் அரசர் பெருமானுக்கும் அறிவித்துள்ளேன். அவளே இவள்” எனக் கூறினான்.

மணிமேகலையின் திறம் அறிந்து மன்னவன் மகிழ்ந்தான்; பின்னர் மணிமேகலை அவனே நோக்கி, “அரசே! ஆருயிர் பசிபோக்கி உன் அருள் நிறை உள்ளத்திற்கு ஆக்கம் அளித்திருந்த இவ்வமுதசுரபி, பண்டு உன் கையில் இருந்து, இப்பிறவியில் என் கையில் வந்துளது. மன்னனகி மாநிதி அடைந்தமையால், உன் அறிவு மழுங்கி உளது. அதனால் நீ பண்டைப் பிறப்பின் இயல் பினை உணர்ந்திலை. போன பிறவியைத்தான் மறந்தனை என்றால், ஆவயிற்றிற் றோன்றிய இப்பிறப்பியல்பையும் மறந்துவிட்டனையே; என்னே உன் மயக்கம். மணிபல்லவம் அடைந்து, புத்த பீடிகையை வலம் வந்தாலல்லது நின் பிறப்பியல்புகள் நினக்குப் புலப்படா; மன்னவ மணிபல்லவம் செல்கிறேன்; நீயும் ஆண்டு வருக” எனக் கூறி வரவேற்பு அளித்துவிட்டு வானூடெழுந்து மறைந்து விட்டாள்.

போன பிறவி குறித்தும், புகுந்த பிறவி குறித்தும் மணிமேகலை கூறிய மாற்றங்கள் புண்ணியராசன்