பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

மனத்தைப் புண்படுத்தின. அகத்துயரோடு அரண்மனை அடைந்தான். அடைந்தவன், தன்னை வளர்த்த தாயான அமரசுந்தரியை அணுகித் தான் பிறந்த முறையைத் தனக்கு விளங்க உரைக்குமாறு வேண்டிக்கொண்டான். மண்முக முனிவனே தந்தை; பொற்குளம்பும் பொற் கோடும் கொண்டு அம்முனிவன் அறப்பள்ளியில் வாழ்ந்த ஆவே தாய்; மகப் பேறில்லாத் தானும் தன் கணவனுய பூமிசந்திரனும் அவனை வளர்த்த தாயும் வளர்த்த தந்தையுமே ஆவர் என்ற உண்மைகளை அவள் ஒன்றுவிடாமல் உரைத்தாள்.

அமரசுந்தரியால் உண்மை உணர்ந்த அரசன் போன பிறவியில் தாய்வழி வந்த பழியும், புகுந்த பிறவியில் பசுவயிற்றில் வந்த பெரும் பழியும் நினைந்து, நெடிது புலம்பினன். அரசாள் செல்வத்தை அவன் உள்ளம் வெறுத்தது. குறுநில மன்னர்கள் தன் கால் பணிந்து குறைகூறி முறை வேண்டற்காம் காலத்தை, எதிர்நோக்கிக் காத்துக் கிடக்க அரியணையில் வீற்றிருந்து அறிவன அறிந்த பெரியோரைப் பணிந்து, அவர் கூறும் அறவழி அரசோச்சி, ஆடல் கண்டு, பாடல் கேட்டு அரசமாதேவியார் ஊடல் கொள்ளின், அதுதீர அவர் உவப்பன புரிந்து வாழும் வேந்தர் வாழ்வில் வெறுப்புக் கொண்டான். பற்றறத் துறத்தலே பிறவிப் பயனம் என உணர்ந்தான். உணர்ந்த வழி நடந்து காட்டத் துணிந்தான்.

அரசன் துணிவை அமைச்சர் உணர்ந்தனர். உடனே சனமித்திரன் எனும் தலைமை அமைச்சன் அரசனை அணுகி, அடி பணிந்து “வேந்தே வாழி! பண்டு இந்நாடாண்டிருந்த மன்னவன், நின்னை அடை