பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45



புண்ணியராசன் வருகையை எதிர்நோக்கி மணிபல்லவத்தில் காத்துக் கிடந்த மணிமேகலை, அவன் ஊர்ந்து வந்த கலம் கரைசேர்ந்ததும், எதிர் சென்று வரவேற்றாள். அவனை அழைத்துக்கொண்டு திரையுலாவும் தேமலர்ச் சோலைகளைக் கொண்ட அத்தீவை வலம் வந்தாள். பின்னர் பழம் பிறப்புணர்த்தும் தருமபீடிகை முன் மன்னனைக்கொண்டு நிறுத்தினாள். அரசன் அதை வலம்வந்து வணங்கி நின்று வாழ்த்தினான். அந்நிலையே கையிற்கொண்ட கண்ணாடி காண்பவர் முகத்தைக் களங்கம் ஒழித்துக் காட்டல்போல், பீடிகை, புண்ணியராசன், ஆபுத்திரனாய் வளர்ந்து வாழ்ந்த பழம்பிறப்பை உணர்த்திற்று; முன்னைப் பிறப்பின் நிகழ்ச்சிகள் அவன் மனக் கண்முன் நின்று களிநடம் புரிந்தன. மதுரைக் கலை நியமத்தில் கோயில் கொண்டிருக்கும் சிந்தாதேவியை நினைந்து நெஞ்சுருகி வாழ்த்தினான்.

பழம் பிறப்புணர்ந்து தன்னிலை மறந்து வணங்கி நிற்கும் புண்ணியராசன் நிலை கண்டு மணிமேகலை மகிழ்ந்தாள். பின்னர் அவனை அத்தீவின் தென்மேற்குத் திசைக் கண் இருந்த கோமுகிப் பொய்கைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் அதன் கரையில் இருந்த புன்னை மரத்தடியில் தங்கினர். மன்னனும் மணிமேகலையும் வந்திருப்பதை, அப் பொய்கையைக் காத்து நிற்கும் தீவதிலகை அறிந்து ஆங்கு வந்தாள். “அருந்துயர் தீர்க்கும் மருந் தளிக்கும் அமுதசுரபி கொண்டு உயிர்களின் பெருந்துயர் தீர்த்த பெரியோய்! வருக வருக” என வரவேற்றாள். பின்னர், “அரசே! அன்று உன்னை அறியாது விட்டுச் சென்று, பின்னர்ப் பிழையுணர்ந்து ஈண்டு வந்து, நீ இறந்தமை அறிந்து, அதனால் தம்முயிர் நீத்த வணிகர்