பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

னாள். பின்னர், “அரசே! அரசே! நின் பழம் பிறப்பின் பெருமையை நீ அறியச் செய்து, அதனால், இவ்வுலகமும், இவ்வுலகைச் சூழக் கிடக்கும் பல்லாயிரம் சிறு தீவுகளும் நின் பெருமை அறிந்து நின்னைப் போற்றிப் புகழுமாறு செய்தல் வேண்டும் என விரும்பினேன். அதற்காகவே, உன் நகர் வந்து, உன்னை ஈண்டு அழைத்து வந்தேன். நாடாள் வேந்தே! நாட்டில் நல்லறம் நின்று நிலைபெற வேண்டும்; நாடாளும் அரசன்பால் அறம் நீங்காதாயின், அவனாளும் நாட்டில் வாழ் உயிர் ஒவ்வொன்றும் அவ்வற வழி நிற்கும், ‘அறம் எனப்படுவது யாது’ என அரசே! கேட்பின், அறைவேன், கேள். மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுவன மூன்று: அவை உண்டி, உடை, உறையுள். இம் மூன்றிலும் குறை நேராவாறு நின்குடிக் கீழ் வாழ்வாரைப் பேணிப் பேரரசு செலுத்துவாயாக” என அரசர்க்குரிய அறநெறிகளை அவன் மனங் கொள்ளுமாறு எடுத்துரைத்தாள்.

மன்னர்க்கு உரியன என மணிமேகலை எடுத்துக் கூறிய அறிவுரையினை மன்னன் மனத்துட்கொண்டான். மயங்கிய தனக்கு மதியையுணர்த்திய மணிமேகலையை நோக்கி, “என் பிறப்பை எனக்கு உணர்த்தி என்னை வாழ்வித்த நின்பெருந்திறத்தை யான் என்றும் மறவேன். நீ கூறிய நல்லரசு என் நாட்டில் மட்டு மல்லாது வேறு பிற நாடுகளிலும் நிலவ நான் வழி காணுவேன். அதுவே என் கடன்” என உளமாரக் கூறி உறுதிமொழி அளித்தான்.

புண்ணியராசன் பழம் பிறப்புணர்ந்து பெருமை பெற்றதோடு அறநெறி அரசாளும் அறிவுடையனானமை