பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

விட்டதாக, ‘என் கணவனைக் காணீரோ? என் கணவனைத் தாரீரோ?’ எனக் கூவி அழுதவாறே காவிரிக் கரை நெடுகக் கால்கடுக்கத் தேடி அலைந்து இறுதியில் கடல் நீர், கணவனைக் காட்டிக் கரைக் கண் கொணர்ந்து தரப்பெற்று மகிழ்ந்தாள் கரிகாலன் மகள் ஆதிமந்தி.

வாணிக வளம் விரும்பும் கணவனைக் கலம் ஊர்ந்து கடல் கடந்து செல்லவிடுத்து, தனித்திருந்து வாழ்தல் தன்னால் இயலாது எனும் உணர்வால், அவன் வருங் காறும் உணர்வற்றிருக்கும் நிலையை விரும்பி, அவ்வாறே வழிவிடக் கடற்கரைக்குச் சென்றவள், அவன் கலம் மறைந்ததும் கல்லுருவாகிப் போன கணவன் பொருளீட்டி வரும்வரை அக்கடற்கரை மணலிலேயே கிடந்து, அவன் கலம் கரை ஏறியதும் கல்லுருவம் நீத்துக் காரிகை வடிவாகிக் கணவனே அடைந்து களிப்புற்றாள் ஒருத்தி.

உடனாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இரண்டனுள் மாற்றாள் குழவி ஒரு கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துபோக, வாழ்ந்தால் இரண்டும் வாழ்தல் வேண்டும், இறந்தால் இரண்டுமே இறத்தல் வேண்டும்; ஒன்று இறக்க, ஒன்று உயிர் கொண்டு வாழ்தல்கூடாது; குழந்தையை இழந்து மாற்றாள் மனத்துயர் உறுங்கால், தான் மட்டும் தன் குழந்தையோடு கொஞ்சி மகிழ்வது கூடாது; அவளேபோல் தானும் தன் குழந்தையை இழந்து துயர் உறுதல் வேண்டும் எனும் உயர்வுள்ளம் கொண்டு, மாற்றாள் குழவி வீழ்ந்திருந்த கிணற்றிலேயே தன் குழந்தையையும் இட்டுக் கொன்று, பின்னர்த் தன் உயர்வுள்ளம் கண்டு உவந்த இறையருளால், இரு குழந்தைகளையும் உயிருடன் பெற்று உயர்வுற்றாள் ஒருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/9&oldid=1252975" இலிருந்து மீள்விக்கப்பட்டது