உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

100

தைக் கண்டு கண்ணபிரான் ஏமாற்றமடைந்து, “நம் மகளென்று எண்ணினோமே! இவர்கள் யாரோ தெரியவில்லையே” என்று விழித்தவாறு நிற்கையில், “ஹல்லோ! மை பாதர் குட்மார்ணிங்க்”… என்று கூறியவாறு வெள்ளைக்கார உடையிலுள்ள அவர் மகள், தகப்பனாரை சேர்த்துக் கட்டிக் கொண்டதைக் கண்டு திடுக்கிட்ட துரைக்கண்ணன், அப்படியே ப்ரமை பிடித்துப் போய், “இதென்ன பாமாவா?… என் கண்மணி பாமாவா?…” என்று ஒரு விதமான பதட்டத்துடன் கேட்டு, வெறிக்க வெறிக்க பார்த்தார். தன் செல்வி இங்கிருந்து சென்ற போது, இருந்த அழகென்ன, அலங்காரமென்ன, ஜாதி மத ஆசையின் ஆழமென்ன, இப்போது தொப்பியும், கவுனும் அணிந்து வந்துள்ள கோலமென்ன என்றதை அவராலேயே நம்ப முடியாமல், மீண்டும் பதறியவாறு… “இதென்னம்மா வேஷம்? இதென்ன கண்றாவி கோலம்…” என்று வாய் விட்டே உரக்கப் பதட்டத்துடன் கேட்டார்.

பாமா சிரித்துக் கொண்டே, “அப்பா உள்ளே போவோமே… ஏன் இத்தனை படபடப்பு அப்பா? காலத்திற்கேற்ற போக்கில், மனிதர்கள் வாழ்க்கை வண்டியை செலுத்தினால்தானே சுகமாய் வாழ முடியும்? அப்பா, இதோ இவர்தான் என் கணவர் மிஸ்டர் ஸ்டோன் துரையவர்கள். இவர்கள் எனது நாத்தனார் மிஸஸ் ஸ்மித், இவர் மிஸ்டர் ஸ்மித்” என்று கூறும் வார்த்தைகளைக் கேட்ட உடனே, பாவம் துரைக்கண்ணனுக்கு வானமே இடிந்து, தலை மீது விழுந்து விட்டது போன்ற மகத்தான அதிர்ச்சி உண்டாகி, “ஹா! டாக்டர்… டாக்டர் ஸ்ரீ தர்… இங்கு வாருங்கள்…” என்று கூவியபடியே மூர்ச்சித்து விழுந்து விட்டார்.

உண்மையில், தன் மகளுடன் ப்ரமாதமாய் குலாவி மகிழ்ந்தவாறு கனவான் வரப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதரனுக்கு இந்த கூக்குரலின் அலறல் திடுக்கிடச் செய்தது; ஓட்டமாக ஓடி வந்தான்.