பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.9. சொல்லின் செல்வர்
சேதுப்பிள்ளை

தோற்றுவாய்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்; ஆங்கில மோகம் கொண்ட அவர் காலத் தமிழரின் செவிகளில் சிந்தைக்கினிய செந்தமிழ் நடைகளை ஓதி அவர்தம் நெஞ்சக்களனில் தமிழ் உணர்வைப் பாய்ச்சியவர்; இத்தகு பீடுசால் பெருமைகளைத் தனக்கே உரியதாக்கிக் கொண்ட தமிழ்த் திருமகன்-தமிழிலக்கிய வானின் விடுவெள்ளி ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றம் உடைத்து. அவர்தம் தமிழ்த்தொண்டு உரையிட்டுச் சொல்லொணா அருமை வாய்ந்தது.