பக்கம்:சாமியாடிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15

கோலவடிவு தெருப்பாதை தெரியும்படியான இடத்தில் உட்கார்ந்திருந்தாள். தெருவில், துளசிங்கம் போவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு ஏன் பார்த்தோம் என்பது மாதிரி கோபம் ஏற்பட்டது. கடைசில போயும் போயும் இந்தக் கழிச்சுப் போட்ட துளசிங்கத்த பெரிசா நெனைக்கிறேன் பாரு. மனுஷனா இவன். இல்ல. இவருட ஊரே கும்பிடுற மாதிரி பாக்கிற எங்கப்பாவை நேத்துப் பிறந்த இந்த மனுஷன் பழனிச்சாமின்னு நாக்குமேல பல்லுப் போட்டு பேசியிருக்கார். எனக்கு, குங்குமம் வச்சது நெனப்பிருந்தா, முத்தம் தந்தது மறக்காட்டா. இப்டி துள்ளுவாரா. கடைசில, இவரு அந்த காத்துக்கருப்பன் கூட்டத்துல உதைபட்டாதான் புத்தி வரும்.

அய்யய்யோ அக்கினி ராசா அந்த வகையறாவாச்சே. துளசிங்கத்த உதைச்சால் நாமுல்லா விழுவேன். அதுவும் அக்கினி ராசா முன்னால. அது அப்புறம். இப்போ நானும் கரும்பட்டையான். எங்க குடும்பத்த இளக்காரமா பேசுற யாரும் எனக்குப் பெரிசில்ல. ஆமா எனக்கு குங்குமம் வச்சதை அந்த மனுஷன் தமுக்கடிப்பாரோ. முத்தம் கொடுத்ததை அம்பலப்படுத்துவாரோ. எதுக்கும் அவரு கிட்ட போயி சொல்லிட்டு வந்துடனும். நீருதான் குங்குமம் வ்ச்சி ரு. நான் நெத்தியக் காட்டலன்னு சொல்லணும். முத்தத்த எடுத்துக்கீட்டீரே தவிர. நான் தர்லன்னு சொல்லணும். தெரிஞ்சு தெரியாம நடந்தத மறந்துடும். நீ யாரோ. நான் யாரோன்னு சொல்லணும். இனிமேல் அவருக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது. எம்மாடி இவ்வளவு நடந்த பிறகும் அவரு. எங்க குடும்பத்த இவ்வளவு இளப்பா நெனச்ச பிறகு அவர கட்டிக்க அப்பா சம்மதிச்சாலும். நான் சம்மதிக்க மாட்டேனாக்கும்.மூஞ்சில அடிச்சாப்ல. அவர்கிட்ட பழைய குப்பையை கிளறப்படாதுன்னு சொல்லிட்டு வந்துடலாம்.

கோலவடிவு, பயப்படாமல் எழுந்தாள். கம்பீரமாக நடந்தாள். அதே அந்த ஒற்றையடிப் பாதையில் ஒட்டமும் நடையுமாக நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/151&oldid=1243716" இலிருந்து மீள்விக்கப்பட்டது