பக்கம்:சாமியாடிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

153




16

காலை வேளை. கதிரவன் தங்கப் பிரவேசம் செய்த நேரம்.

ஆலமரத்தடிக்கு அருகே அம்மன் கோவில், களை கட்டியது என்றால், சுடலை மாடன் கோவிலும் சும்மா இருக்கவில்லை. இங்கே கரும்பட்டையான்கள் பத்துப் பதினைந்து பேர், அங்கே செம்பட்டையான்கள் பதினைந்து இருபதுபேர், இருதரப்பும் தத்தம் கோவில்களை உற்றுப் பார்த்தார்கள். அம்மன் கோவிலில் சிலர் பலருக்கும், சுடலை கோவிலில் பலர் சிலருக்கும் உத்திரவுகள் பிறப்பிப்பது போல், கோவில்களின் பல்வேறு இடங்களைச் சுட்டிக் காட்டினார்கள். உடனே இரண்டிலும் ஏணிகள் சாத்தப்பட்டன. யார் ஏணியில் முதலில் ஏறுவது என்பதுபோல், இருதரப்பும் ஏணிக் கட்டத்திலேயே போட்டி போடுவதுபோல் தோன்றின. ஏறியவர்களிடம் சுண்ணாம்புக் கலசமும் தூரிகையும் ஒரே சமயத்தில் கொடுக்கப் பட்டன. அம்மன் வீட்டில் தெளிந்த சுண்ணாம்பு வெள்ளை சுடலை வீட்டில் மங்கலாகவும், சுடலை வீட்டு வெள்ளைச் சுண்ணாம்பு அம்மன் வீட்டில் மங்கலாகவும் தெரிந்ததை, செம்பட்டையான்களும், கரும்பட்டையான்களும் தத்தம் கோவில் சுவர்கள் அதிகமாய் பிரகாசிப்பதாக அனுமானித்துக் கொண்டார்கள்.

காளியம்மன் கோவில், சட்டாம்பட்டியின் மேல ஊருக்கும் கீழ ஊருக்கும் எல்லைக் கோடாக உள்ள கோவில். இதற்கு தென் கிழக்கே துளசிங்கம் வீடு திருமலை நடக்க ஏழு நிமிடமும், அக்னி ராசா நடக்கப் பன்னிரண்டு நிமிடமும் ஆகும் தூரத்தில் இருந்தது. சுடலைமாடன் வைத்திருக்கும் குறுக்குத்தடி, காளி கோவில் பக்கமும், காளியின் திரிசூலம் சுடலை கோவில் பக்கமும் நன்றாகத் தெரிந்தன.

தேநீர் கடையில் இருந்து பெரிய கூஜாவில் வாங்கி வரப்பட்ட காபியை, கையோடு கொண்டு வந்த டம்ளர்களில் குடித்துக் கொண்டிருந்த பீடிப் பெண்களைக் குள்ளக் கத்தரிக்காய் ராமசாமி விரட்டினார். அவருக்குக் கொடுக்காமல் குடித்தால் எப்படி..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/155&oldid=1243717" இலிருந்து மீள்விக்கப்பட்டது