பக்கம்:சாமியாடிகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

சு. சமுத்திரம்


கோலவடிவு என்ன நினைத்தாளோ, ஏது நினைத்தாளோ, அம்மன் கோவில் படிக்கட்டுக்களில் ஏறினாள். உள்ளே போய், அம்மனுக்கு எதிரே சரிக்குச் சமமாய் உட்கார்ந்து கொண்டாள். சுவரோரம் உள்ள கொடியில் சிவப்புச் சேலைகள் தொங்கின. அம்மனின் ஊதாப் பாவாடை. அந்தச் சேலைகளுக்குள் சிக்கியிருந்தது. அம்மனின் கால்மாட்டில் ஒரு வெட்டரிவாள். வாடிக்கிடந்த வாழை இலையில் அழுகிப் போன வாழைப்பழங்கள். உலர்ந்துபோன வெற்றிலைகள். கோலவடிவு, சப்பாணி போல் நகர்ந்து, அம்மன் சிலையை, மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தாள். பிறகு இரண்டு கரங்களை பின்புறமாகக் கொண்டுபோய், அம்மனின் முதுகைத் கோர்த்துப் பிடித்தபடியே, அம்மாவின் மார்பிலே தலை சாய்த்தாள். திக்கற்றவளுக்கு தெய்வமே துணை என்று பிடித்தாளோ. தெய்வமே திக்கற்றும் போய் விட்டதாக நினைத்து, அந்த சிலைக்கு ஆதரவு காட்டுவதாக எண்ணி பிடித்தாளோ.. அவளுக்கே பிடிபடவில்லை.

உச்சி வெயில் சுட்டது.

கடலை மாடன் உபயத்தில் இரண்டு நாட்கள் இரவும், பகலும், லைலாவையும் ரிக்கார்ட் டான்ஸையும், முப்பது எம்.எம். கராத்தே படத்தையும் பார்த்த ஊரார், அந்தப் பட்டப் பகலில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்... கரும்பட்டையான்களும், காத்துக் கருப்பன்களும், பழனிச்சாமிக்காக விட்டுக் கொடுத்த ராத்தூக்கத்தை, அந்தப் பகலில் கரைத்துக் கொண்டிருந்தார்கள். எவரும் கோலவடிவை, அந்த கோவிலுக்குள் பார்க்கவில்லை. சில சின்னக் குழந்தைகள் மட்டும் அவளைப் பார்த்துவிட்டு, பயந்துபோய் அப்பாம்மாக்களிடம் சொல்வதற்காக ஒடிக் கொண்டிருந்தபோது

கோலவடிவு, சத்தம் கேட்டு, அம்மன் மார்பில் குப்புறப் போட்ட முகத்தைத் திருப்பினாள். ரஞ்சிதம் வீட்டில் பலமாகக் கத்தியபோது லேசாகக் கேட்ட துளசிங்கத்தின் சத்தம், இப்போது லேசாய் ஒலித்தாலும் அவளுக்குப் பலமாய்க் கேட்டது. அதோ போய்க் கொண்டிருக்கிறான். இவள் இருப்பது தெரியாமலே யூனிபாரம் போட்ட இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்பாய் பக்கத்துக்கு ஒருவராய் நடக்க, அவன் அட்டகாசமாகப் பேசியபடி, அனாவசியமாக கைகால்களை ஆட்டியபடி நடந்து நடந்து பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/310&oldid=1244189" இலிருந்து மீள்விக்கப்பட்டது