பக்கம்:சாமியாடிகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

309


"ரஞ்சிதம் மட்டும் நான் சொன்னதைக் கேட்காட்டால். அவள ராத்திரியோட ராத்திரியா. ஏதாவது செய்யப் போறேன். நீங்கதான் கண்ணை மூடிக்கணும்."

"அதுக்கென்ன. சாப்பாடுல்லாம் ஆயிட்டு. இனும என்ன வேல. நாங்க சாயங்காலமா ஸ்டேஷனுக்குப் போயிடுறோம். எது செய்தாலும். சாட்சி இல்லாம செய்யணும்."

கோலவடிவு, கோரவடிவாய் எழுந்தாள்.

ஆயிரமாயிரம் ஆடு கோழிகளை வெட்டிய அம்மனின் வெட்டரிவாளை எடுத்துக் கொண்டாள். எப்படிக் கழுவினாலும் ரத்தத்துரு போகாத வெட்டரிவாள். விரிந்த குழல். துடிக்கின்ற உதடுகள். கடிக்கின்ற பற்கள். ஊழி நடனம் ஆடுவது போன்ற உடலாட்டம். கோழைத்தனம் கலைந்தது போன்ற ஆவேசம். இலக்கு தேடும் வெட்டரிவாள். இலக்கு கண்ட பெண்சக்தி.

கோலவடிவு தாவிக் குதித்தாள். ஓங்காரமாய் கூக்குரலிட்டாள். ஆங்காரமாய் கத்தினாள். ஊரே அதிரும்படி ஒசையிட்டு ஓடினாள்.

"ஏய். டேய்."

மேனி வில்லாய் வளைய, முப்பது பற்கள் இப்போது கோரமாய் காட்சி காட்ட, கோலவடிவு ஆகாயமும், பூமியுமாக ஆனவள் போல், துளசிங்கத்தை நோக்கி ஓடினாள். திரும்பிப் பார்த்த துளசிங்கம், எதுவும் பிடிபடாமல், அப்படியே நின்றான்.

அவனுக்கு, மெய்க்காவல் போட்ட காவலர்கள், வெட்டரிவாட்காரியைப் பார்த்துவிட்டு, திருடர்கள் போல் ஓடினார்கள். வேண்டாம்மா. வேண்டாம்மா...' என்று கூச்சலிட்டபடியே அங்கு மிங்குமாய் ஓடி, ஆளுக்கு ஒரு இடமாகத் தேடிப் பிடித்து ஒளிந்தார்கள். இப்போது திகைத்து நின்ற துளசிங்கமும் ஒடினான். கோலவடிவை விட்டு, அவள் குறியில் இருந்து விலகி ஒடுவதாக நினைத்து, அவள் அருகிலேயே ஒடினான். குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான். அய்யய்யோ என்று அலறியபடியே அங்குமிங்குமாய் ஓடினான். அவளையே சுற்றிச் சுற்றி ஒடினான். கற்ற குஸ்தி கைகொடுக்கவில்லை. கண்ட பெண்களோ இவளைப் போல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/311&oldid=1244187" இலிருந்து மீள்விக்கப்பட்டது