பக்கம்:சாமியாடிகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

சு. சமுத்திரம்


கோலவடிவின் தலைமுடி, அந்த ஆடிக்காற்றில் பின்னாலும், முன்னாலுமாய் கோரதாண்டவம் ஆடியது. அவள், அழுத்தமாய் நின்றாள். அர்ச்சுனன், இலக்கை மட்டுமே பார்த்ததுபோல், துளசிங்கத்தின் கழுத்தை மட்டுமே பார்த்தாள். இவன் இலக்கோ அங்குமிங்குமாய் ஆடி அப்படியே நிலைகுலைந்து, நின்றும், நடந்தும், ஒடியும் அலைக்கழிந்தபோது

ஒரு வீச்சு. ஒரே வீச்சு. கோலவடிவின் வலது கரத்தில் இருந்து விடுபட்ட வெட்டரிவாள், துளசிங்கத்தின் கழுத்தில் விழுந்தது. கழுத்துச் சதையின் பாதி இடத்திற்குள் ஊடுருவிப் பாய்ந்து கெளவிப் பிடித்தது. அவன் ரத்தமும், சதையுமாய் தரையில் சாய்ந்தான். வெட்டுப்படும் கிடா போல் அலறி விழுந்தான். கோலவடிவு விடவில்லை. அவனிடம் அடிமேலடியாய் நடந்து போனாள். அவன் முதுகில் வலது காலை வைத்து அழுத்தியபடியே, தொங்கிக் கொண்டிருந்த தலையை கீழே கிடந்த அரிவாளை எடுத்து அறுத்தாள். வாழைக்காயை சீவுவது போல் சீவினாள். ஒரே பாகம். கொத்துக் குறை, மிச்சம் மீதி பேச்சுக்கே இடமில்லை.

கோலவடிவு, துளசிங்கத்தின் துண்டுபட்ட தலையை, அதன் முடியைப் பிடித்துத் தூக்கினாள். தூக்கியபடியே நடந்தாள். காளியம்மன் கோவிலுக்குள் துள்ளிக் குதித்துத் தாவினாள். அம்மனுக்கு முன்னால் அந்தத் தலையை வைத்தாள். வெட்டரிவாளையும், விடாமலே பிடித்துக் கொண்டாள். அந்த தலைக்கும் அம்மன் சிலைக்கும் இடையேயான இடத்தில் ரத்தாசனம் போட்டாள். அவள் நெற்றிப் பொட்டில் துளசிங்கத்தின் ரத்தத் துளிகள். சிவப்பான தலை. குங்குமமான கண்கள். ரத்தம் உறைந்த கழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/312&oldid=1244186" இலிருந்து மீள்விக்கப்பட்டது