பக்கம்:சாமியாடிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சு. சமுத்திரம்

76 சு. சமுத்திரம்

கோலவடிவு குளித்து முடித்துவிட்டு, கீழே தொங்கிய முந்தானைச் சேலையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு, அதை வைத்தே தலையைத் தேய்த்துவிட்டு பம்ப் செட்டு அறைக்குள் போனாள். கால்மணி நேரம் கழித்து, மாம்பழ டிசைன் போட்ட புடவையோடும், மஞ்சள் கலர் ஜாக்கெட்டோடும் வெளி வந்தாள்.

"ஓங்கள ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா அத்த."

"அப்படில்லாம் இல்ல. இந்த அழகுக் கோலத்த கண்ணுல பார்க்கதுக்கு எவ்வளவு நேரமுன்னாலும் கால நிறுத்தி வைக்கலாம்.”

"நல்லாத்தான் பேசுறிய." "ஆமா. ஒன் சேலையில ஈரம் தெரியல..."

"எப்டித் தெரியும். வண்ணான் வெளுத்த புடவை. எனக்கு ஈரப் புடவையோட ஊரு வழியா நடக்கதுக்கு ஒரு மாதிரி இருக்கும். துணி அப்படியே உடம்பு முழுசும் ஒட்டி சீ. அதனாலதான் குளிக்க வரும்போதெல்லாம் கூடவே ஒரு சேலயக் கொண்டு வந்துடுறது."

கோலவடிவு, குளிக்கும்போது உடுத்த சேலையை, ரெண்டு தப்புத் தப்பிவிட்டு அதை சால் மேட்டில், காயப் போட்டுவிட்டு, அதே மேட்டில் காய்ந்து கொண்டிருந்த துணிமணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து, அடுக்கிக் கொண்டிருந்தபோது, அலங்காரி அத்தை அங்கேயே, பூடகமாய்க் கேட்டாள். -

"மேலத் தெருவுல காத்துக் கருப்பன் குடும்பத்தச் சேர்ந்த அக்கினி ராசாவப்பத்தி நீ என்ன நெனக்கே."

"ராமையா மாமா மகன்தானே. நல்லவனாச்சே தானுண்டு. தன் வயலுண்டுன்னு இருக்கிறவன். வம்பு தும்பு கிடையாதவன்னு அப்பா சொல்லுவார். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதாம்."

"ஒங்கப்பா சொன்னால் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். பரவாயில்ல. ஒனக்குக் பிடிச்சவனே புருஷனா அமையுறதுல எனக்கு சந்தோஷம்."

"என்ன அத்த சொல்லுதிய."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/78&oldid=1243508" இலிருந்து மீள்விக்கப்பட்டது