108
சாயங்கால மேகங்கள்
"என்ன சத்தமாயிருந்திச்சு இங்கே?”
“ஒண்ணுமில்லே! யாரோ கார்ப்பொரேஷன் ஆட்கள்னு இருபது ரூபாய்க்குமேலே தின்னுப்புட்டு பில் கொடுக்காமல் போகப் பார்த்தாங்க. இவரு வந்து சத்தம் போட்டப்புறம் பில்லுக்குப் பணம் குடுத்திட்டு முறைச்சிட்டுப் போறாங்க.”
“ஐயையோ, அவங்க கிட்டப் போய் ஏன் பில் கேட்டடீங்க...? கார்ப்பொரேஷன் ஆட்கள், விற்பனை வரி ஆளுங்க இவங்க கிட்ட எல்லாம் நான் பில்லுக்குப் பணம் கேட்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சும்மா! அஞ்சு ரூபா பில்லைக் குடுத்திட்டு அதைக் குடுத்திட்டமே என்ற எரிச்சலில் அப்பாலே போயி ஐநூறு ரூபாய்க்குச் செலவு வச்சிடுவாங்க...”
“இங்கே இப்படிப் பரஸ்பரமான பயத்திலும், அட்ஜஸ்ட் மெண்டிலுமே நாம் லஞ்சத்தைப் பேணி வளர்த்து வருகிறோம்.”
“என்னப்பா செய்யறது; அங்கே இங்கே அலையச் சொல்லி நோட்டீஸ் குடுத்திட்டாங்கன்னா நான் ஒருத்தி கடையைக் கவனிப்பேனா? கார்ப்பரேஷன் ஆபீஸுக்கும் கமர்ஸியல் டாக்ஸ் ஆபீசுக்கும் அலஞ்சிக்கிட்டிப்பேனா?”
“லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது. மக்களும் அதிகாரிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வளர்க்கிறார்கள். பாதித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்பாராலுமே வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது”
இதைக் கேட்டுச் சித்ரா சிரித்தாள். முத்தக்காளுக்கு இது புரியாததனாலோ என்னவோ அவள் கவலையோடு நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது. பயமும், சுய நலமும் உள்ளவரை லஞ்சமும், சுரண்டலும் போக முடியாதென்று பூமி எண்ணினான். இந்திய ஜனத்தொகையில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பயமும் சுய நலமும் நிறைந்தது. அதனால்தான் அவர்கள் சுமாரானவர்களை ஆளத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிகவும் சுமாரானவர்.