120
சாயங்கால மேகங்கள்
"விஷப்பாம்பின் பிளந்த நாக்குப் போல அதிகார பலமும், பணபலமுமே இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எந்த நியாயத்தையும் தீண்டி அழிக்க முடிகிற காலம் இது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி நான் அந்தப் பையனின் தந்தையைப் பார்த்துப் பேசிப் பயனில்லை. சிறு வயதில் அவர் பையன் ஆசைப்படுகிற விளையாட்டுப் பொம்மையை ஆகிற விலைக்கு வாங்கித் தருவதைப் போல் பெண்ணின் மனத்தையும் இன்று வாங்கித் தரலாம் என்று அவர் நினைக்கிறார் போலிருக்கிறது! நீங்கள் அந்தப் பையன் படிக்கிற கல்லூரி முகவரியைத் தாருங்கள்.”
கல்லூரியின் பெயரைச் சொன்னாள் தேவகி.
“இவர்கள் எல்லாம் அவனைப் பற்றி வர்ணிப்பதிலிருந்து, எப்போதும் அவனைச் சுற்றி ஒரு ரவுடிக் கூட்டம் இருக்கும். போலத் தெரிகிறது” என்று அதுவரை பேசாமலிருந்த சித்ரா குறுக்கிட்டுச் சொன்னாள். அவள் குரலில் கவலை தொனித்தது.
“ரௌடிகளுக்காக நான் பயப்படவில்லை. பரிதாபப்பட மட்டுமே செய்கிறேன்.”
என்று உடனே வெட்டினாற் போலப் பூமியிடமிருந்து பதில் வந்தது.
அந்தப் பெண்ணின் பெயர் என்ன? அவள் தாயின் பெயர் என்ன முதலிய விவரங்களையும் தேவகியிடம் கேட்டுக் குறித்துக் கொண்டான் பூமி. பையனைப் பற்றியும், அவன் தந்தையைப் பற்றியும் கூட மறுபடியும் விசாரித்த பின்,
“இதை நான் சரிப்படுத்த முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பூமி திடமான குரலில் கூறினான். அவன் அந்த அளவு உறுதி கூறியதே தேவகிக்கு அப்போது மலையளவு ஆறுதலளிப்பதாய் இருந்தது.