உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

221

அவனது வேதனை புரியாமல் அவள் அவனையே கண்டிக்க முற்பட்டுவிட்டாள். பூமி அப்போதிருந்த மன நிலையில் அவளைப் பொருட்படுத்தியோ கடிந்துகொண்டோ அவளுக்கு மறுமொழி கூறவில்லை.

பணம் சேரத்தொடங்கியதும் சுயநலமும், மற்றவர்கள் மற்றவற்றைப் பற்றிய பொது நல அக்கறையிற் குறைவும் அடைந்து பார் யைக் குறுக்கிக்கொள்வது சிலருடைய வழக்கம்.

முத்தக்காளும் மனிதாபிமானமற்ற அந்தச் சிலரில் ஒருத்தியாக மாறியிருந்தாள். காணாமற் போனவன் நேற்று வரை திருட்டுக்கூட்டத்தில் ஒருவனாயிருந்து மாறிச் சில நாட்களே தங்கள் மெஸ்ஸில் வேலை பார்த்தவனாக இருந்தும் அவனைப்பற்றிக் கவலைப்படுவதும், அக்கறை காட்டுவதும் அவனுடைய தாய்க்கு உதவுவதும், தன் கடமை என்று எண்ணினான் பூமி. அது அநாவசியம் என்று நினைத்தாள் முத்தக்காள்.

அதைச்சொல்லி பூமியைத் தான் கடிந்து கொண்டதற்கு அவன் எதுவும் பதில் சொல்லாமல் தன்னை ஒதுக்கியதிலிருந்தே மிகவும் கோபமாயிருக்கிறான் என்பது முத்தக்காளுக்குப் புரிந்து விட்டது. அதில் அவள் சிறிது அடங்கினாள்.

அதற்குள் பூமி திரும்பி வந்திருப்பதை அறிந்து மெஸ்ஸில் உட்புறம் இருந்த காணாமல் போன பையனின் தாய் அவனிடம் வந்து விசாரித்தாள்.

“சீக்கிரம் பையன் கிடைத்துவிடுவான் என்றும் அதுவரை அவள் கவலைப்படாமல் இருக்க வேண்டும்” என்றும் அவளுக்கு அவன் கூறிய ஆறுதலால் அப்போது ஒரு பயனும் விளையவில்லை.

அந்தத் தாய் அழுது கூக்குரலிட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். உடனே முத்தக்காளுக்கு மறுபடி ஆத்திரம் வத்துவிட்ட து.